டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் 2025-26ஐ 8வது முறையாக தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சுமார் 1மணி 14 நிமிடங்கள் பட்ஜெட் வாசித்தார்.
இந்த பட்ஜெட்டில், வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தியதுடன், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிடடுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு விவரங்களையும் வெளியிட்டார். அப்போது பட்ஜெட் உரையின் போது திருக்குறளை சுட்டிகாட்டி பேசினார்.
“வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி” செங்கோன்மை அதிகாரத்தில் உள்ள திருக்குறளை சுட்டிகாட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின், முதல் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து இன்று (பிப்ரவரி 1) 2025 -2026ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அதன்படி முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு? என்ற விவரம் வெளியாகி உள்ளது.
பாதுகாப்பு துறைக்கு ரூ. 4.91 லட்சம் கோடி
உள்துறைக்கு ரூ.2.3 லட்சம் கோடி.
ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ. 2.6 லட்சம் கோடி
சுகாதாரம் துறைக்கு ரூ. 98.311 கோடி.
சமூக நலன் துறைக்கு ரூ. 60052 கோடி.
தகவல் தொடர்பு துறைக்கு ரூ. 95298 கோடி.
கல்வித் துறைக்கு ரூ.1.28 லட்சம் கோடி.
வேளாண்மை துறைக்கு ரூ. 1.7 லட்சம் கோடி
நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு ரூ. 96777 கோடி.
வணிகம், தொழிற்துறைக்கு ரூ. 65553 கோடி.
அறிவியல் துறைக்கு ரூ. 55679 கோடி
இவ்வவாறு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.