டில்லி:

யோத்தி விவகாரத்தில், உச்சநீதி மன்றம் அமைத்த 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவினர் நேற்று சீலிட்ட கவரில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிலையில், அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக உச்சநீதி மன்றம் அறிவித்துஉள்ளது.

இதையடுத்து, வரும் 6ந்தேதி முதல் அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்சநீதி மன்றமே தினசரி விசாரணை நடத்தும் என்று அறிவித்து உள்ளது.

அயோத்தியில்  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரிந்து அவற்றை ராம் லல்லா, நிர்மோகி அக்காரா, சன்னி வக்ஃபு வாரியம் ஆகிய அமைப்புகளுக்கு வழங்க அலகாத் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீரவி சங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய  3 பேர் குழு மத்தியஸ்தர் குழுவை நியமனம் செய்து, அவர்கள் மூலம் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டது.

அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மத்தியஸ்தர் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இதுவரை நடைபெற்ற  பேச்சுவார்த்தை தொடர்பான அறிக்கை நேற்று உச்ச நீதி மன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று விசாரணை நடைபெறும் என்று அறிவித்த உச்சநீதி மன்றம், மத்தியஸ்தர்கள் குழுவினரின் அறிக்கையை ஆய்வு செய்தது. அதைத் தொடர்ந்து, மத்தியஸ் தர்களின் முயற்சி தோல்வி அடைந்துள்ளதாகவும், அவர்களால் நிலம் விவகாரத்தில் எந்தவொரு இறுதி தீர்வையும்  அடைய முடியவில்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இதன் காரணமாக அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை உச்சநீதி மன்ற அமர்வே விசாரிக்கும் என்றும்,   வரும் 6ந்தேதி முதல் தினசரி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.