சென்னை:

ஹெல்மெட் அணியவில்லை என்றால் வாகனத்தை பறிமுதல் செய்வதை நடைமுறைபடுத்த, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதையும் சீட் பெல்ட் அணிவதையும் கட்டாயமாக்கி விபத்துகளை தவிர்க்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணிய பிரசாத் மற்றும் மணிக்குமார் ஆகியோர், வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் விபத்தில் உயிரிழப்பதை தவிர்க்க காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க போக்குவரத்து காவல்துறை இணை மற்றும் துணை ஆணையர்களை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டனர்.

அதன்படி நீதிமன்றத்தில் ஆஜரான காவல்துறை இணை மற்றும் துணை ஆணையர்களிடம், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மீது காவல்துறை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிவதை உறுதிபடுத்தியிருக்கும் நிலையில், தமிழகத்தில் ஏன் அதை பின்பற்றவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

காவல்துறையினரும் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டி உயிரிழப்பது வேதனையளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்

. இதற்கு பதிலளித்த தமிழக அரசு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் காவலர்கள் சஸ்பண்ட் செய்யப்படுவார்கள் என தெரிவித்தது.

இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் கட்டாய ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற  உத்தரவை தமிழக அரசு மீண்டும் நடைமுறைபடுத்த  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதே போல் 3 வது முறையாக விதிகளை மீறிபவர்களின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்ற சட்ட விதியை கண்டிப்புடன் பின்பற்றவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை தள்ளி வைத்தனர்.