தமிழ்நாட்டின் கடைசி ராஜா: சிங்கம்பட்டி ஜமீன் முரு­கதாஸ் தீர்த்தபதி

நெட்டிசன்:

தமிழ்நாட்டின் கடைசி ராஜா நமது சிங்கம்பட்டி ஜமீன் முரு­கதாஸ் தீர்த்தபதி என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தென் இந்தியாவில் எஞ்சியிருக்கும் பட்டம் கட்டிய ஒரே ராஜாவாகக் கருதப்படுப­வர்தான் நமது சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி. இவரது முழுப்பெயர் தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்­கர ஜெய தியாக முத்து சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி.

சுருக்கமாக டி. என். எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. இவரது தந்தை சங்கர தீர்த்தபதி. ஆங்­கிலத்தில் மிகச்சிறந்த புலமை பெற்றுள்ள இவர் சிறந்த டென்னிஸ் விளையாட்டு வீரர்.பலே நடனத்தில் புகழ் பெற்றவர்.

ரக்பி விளையாட்டிலும் முத்திரை படித்தால். தந்தை இறந்ததை அடுத்து மூன்றரை வயதில் இவருக்கு முடிசூட்டப்பட்டுள்ளது. அக்கால சம்பிரதாயப்படி முடி சூட்டப்படு­பவர் பிரேதத்தைப் பார்க்கக் கூடாதாம். அதனால் தந்தையாரின் பிரேதத்தைக் கூட இவருக்கு காட்டவில்லையாம்.

முடி சூட்டப்­படுபவர்களுக்கு ஆய கலைகள் அறுபத்து நான்கும் கற்பிக்கப்படுவதுண்டு. ஆனால் இவருக்கு அப்படி எந்த பயிற்சியும் அளிக்கப்­படவில்லையாம். இருந்தாலும் இவரோ குறி பார்த்து சுடுதல், ரக்பி, போலே நடனம், உதைப்பந்தாட்டம். சிலம்பு, வாள் வீச்சு என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியுள்ளார்.

முடி சூட்டிய ராஜாக்களுக்கு இருக்கும் அபூர்வ சக்தி பற்றி குறிப்பிடும் இவர் நேபாள ராஜாக்கள் கோயிலுக்கு செல்வ­தில்லையாம். காரணம் அவர்கள் தங்களை விஷ்ணுவின் அவதாரமாக கருதுகிறார்­களாம். மழையில்லாத ஊருக்கு அரசர்கள் சென்றால் மழை பெய்யும் என்பது சாஸ்­திரம் மட்டுமல்ல மக்களின் நம்பிக்கையும் கூட. அதே போல 1984 ஆம் ஆண்டு மழையே காணாத மாஞ்சோலை ஊருக்கு இவரை அழைத்தார்களாம்.

இவர் அங்கு போனது தான் தாமதம் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. கிராம மக்கள் நன்றிக்கடனாக எனக்கு துலா­பார மரியாதை செய்தனர் என்கிறார் மிக நெகிழ்ச்சியாக இவர்.

ஒரு அரசருக்கு சிங்கத்தின் பெருந்தன்­மையும் யானையின் வலிமையும் வேண்டும் என்பார்கள். அதன் அடிப்படையி­லேயே  நமது ஜமீனுக்கு சிங்கப்­பட்டி ஜமீன் என்று பெயர் சூட்டப்பட்­டுள்ளது என்று கூறும் இவர் சிங்கம் மற்றும் யானையின் தன்மை கொண்டதாகவே இன்னும் தன்னை உணர்வதாக குறிப்பிடு­கிறார் .

1952-ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரை மேற்குத் தொடர்ச்சி மலையில் 74,000 ஏக்கர் நிலங்கள் ஜமீன் ஆளுகையில் இருந்து வந்தது. மேலும், சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகையில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில், அகமகாதேவர் கோயில், முத்தாரம்மன் கோயில், வல்லப கணபதி கோயில், வெயில் உகந்த அம்மன் கோயில், முப்புடாதி அம்மன் கோயில், சுப்பிரமணியசாமி கோயில், ஊத்துக்குளி சாஸ்தா ஆகிய 8 கோயில்கள் உள்ளன.
இக்கோயில்களுக்கு முருகதாஸ் தீர்த்தபதி பரம்பரை அறங்காவலராக இருந்து நிர்வகித்து வருகிறார்.

காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி பக்தர்களுக்கு ராஜ உடையில் காட்சியளிப்பார். தொடர்ந்து 74 வருடங்களாக சொரிமுத்து அய்யனார் கோயிலில் இவர் ராஜஉடையில் காட்சி அளித்துள்ளார்.

சிங்கம்பட்டி ஜமீன், பிரிட்டிஷ் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 ஆயிரம் கிஸ்தி செலுத்தி வந்துள்ளனர்.இன்று சிங்கம்பட்டி ஜமீன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிரமமாகத்தான் அறியப்படுகிறது. ஆனால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அது 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு ஜமீன். தனி நபரால் வரி வசூல் செய்யப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டு, ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம்.

சிங்கம்பட்டி ஜமீன் அதிக வனப்பகுதியைக் கொண்ட பகுதி. சிங்கம்பட்டி ஜமீனுக்கு 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு சொல்லப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீன் மறவர்கள் பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்றும் நாயக்கர் காலத்தில் சிங்கம்பட்டி பாளையமாக மாறியது என்றும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அது ஜமீனாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் சொல்லியாக வேண்டும். 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தைத் தோற்றுவித்த ராஜா மார்த்தாண்ட வர்மாவுக்கும், எட்டு வீட்டு பிள்ளைமார்களுக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க நடந்த போரில், நமது சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்தவர்கள் கேரள ராஜா பக்கம் நின்று போர் செய்து வெற்றி பெறச் செய்ததனர். அதற்கு நன்றிக் கடனாக, ராஜா மார்த்தாண்ட வர்மன் தன்னுடைய ராஜ்ஜியத்திலிருந்து 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனுக்குக் கொடையாக அளித்தார்.

ஜமீன்சிங்கம்பட்டியில் சிங்கம்பட்டி அரண்மனை 5 ஏக்கரில் அமையப்பெற்றுள்ளது. சிங்கம்பட்டி ஜமீனில் 1,000 குதிரைகளை வைத்துப் பராமரித்து வந்துள்ளனர். 5 தந்தப் பல்லக்குகள் இருந்தன. ஜமீன்சிங்கம்பட்டி அரண்மனையில் கிங் ஜார்ஜ் தொடக்கப் பள்ளி இப்போதும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. தற்போது விவசாயம் செய்து வரும் நமது ராஜா ஜமீன்தார் திரு.முருகதாஸ் தீர்த்தபதி ஆயுள் காப்பீட்டு முகவராகவும் உள்ளார்.

இவ்வளவு பெருமை வாய்ந்த நமது சிங்கம்பட்டி ஜமீன் வரலாற்றை இயக்குனர் பொன்ராம் நடிகர்கள் நெப்போலியன், சிவகார்த்திகேயன், சூரி இணைந்து “சீமராஜா” என்னும் திரைப்படமாக கொடுத்தார்கள் என்பது மேலதிக தகவல்.

Kundrathu Murugaraj முகநூல் பதிவு

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Murugadoss Theertha Pathy, Singampatti Zameen, The last king of Tamil Nadu:, சிங்கம்பட்டி ஜமீன், தமிழ்நாட்டின் கடைசி ராஜா, முரு­கதாஸ் தீர்த்தபதி
-=-