டெல்லி:

ராணுவ வீரர்களுக்கு தரப்படும் உணவு குறித்து சர்ச்சையை ஏற்படுத்திய தேஜ்பகதூரை அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி அளிக்கும்படி மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராணுவத்தில் பணியாற்றிவரும் தேஜ்பகதூர் யாதவ் என்பவர் கடந்த ஜனவரி 9 ம் தேதி, ராணுவ வீரர்களுக்குத் தரப்படும் உணவு குறித்து விமர்சனம் செய்து வீடியோ பதிவை முகநூலில் வெளியிட்டார். அதிர்ச்சி அளிக்கும் இந்த வீடியோ நாடு முழுவதும் வைரலாக பரவியது. இதனால் அவர்மீது அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து தேஜ்பகதூரின் மனைவி சர்மிளாதேவி அவரை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தும் முடியவில்லை. அதனால் அவர் தனது கணவனை கண்டுபிடித்துத் தரும்படி டில்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்தமனு நீதிபதிகள் சிஸ்டானி, வினோத்கோயல் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ராணுவ வீரர் தேஜ்பகதூரின் மனைவி சர்மிளாதேவி, தனது கணவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை சட்டவிரோதமாக காவலில் வைத்திருக்கிறார்களோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரினார்.

இதற்கு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின், எல்லைப் பாதுகாப்புப் படைவீரரான தேஜ்பகதூர் யாதவ் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்படவில்லை என்றும், அவர் வேறொரு படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேஜ்பகதூர் குறித்த சந்தேகத்தைப் போக்க அவரது மனைவியும் மகனும் அவருடன் இரண்டு நாள் தங்கியிருக்க மத்திய அரசு வழிவகை செய்து தரும்படி உத்தரவிட்டனர்.