டெல்லி: பெட்ரோல் டீசல் விலை தினசரி உயர்த்தப்படுவது தேச விரோத செயல் -நிர்வாகத் திறமையின்மையின் அடையாளம் என மோடி தலைமையிலான பாஜக அரசை, பாஜக எம்.பி.யும் மூத்த தலைவருமான சுப்பிரமணியன்சாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் சமயத்தில் சுமார் 4 மாத காலம் உயர்த்தப்படாமல் இருந்த எரிபொருட்கள் விலை, தேர்தல் முடிவுக்கு பிறகு மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. சமையல் கேஸ் மற்றும்  பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் பல்வேறு பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எதிர்க்கட்சிகள் விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி பாஜக அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியம் சாமி கடும் கண்டனம் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அவரது டிவிட்டில் கூறப்பட்டுள்ளதாவது,

பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நாட்டில் கிளர்ச்சிச் சூழலை உருவாக்கி வருகிறது. இப்படிச் செய்வது நிதி அமைச்சகத்தின் அறிவுப்பூர்வமான திவால். தேச விரோதமும் கூட.

இந்த விலைகளை உயர்த்துவதன் மூலம் பட்ஜெட் பற்றாக்குறைக்கு நிதியளிப்பது முற்றிலும் திறமையின்மை என்று சாடியுள்ளார்.

பட்ஜெட் பற்றாக்குறையை சரி செய்ய இதுபோல பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது என்பது நிர்வாத் திறமையின்மையின் அடையாளம் என்று சுப்பிரமணியம் சாமி சாடியுள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும் விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே, இலவசப் பொருட்களால் இந்தியாவும், இலங்கையை போல நெருக்கடிக்கு ஆளாகலாம் என துறை செயலாளர்கள் மத்தியஅரசிடம் வலியுறுத்தி உள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இனிமேல்  இலவசப் பொருட்களை தடை செய்யும் நிலை உருவாகலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.