சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என முதல்வரிடம் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. தொற்று பரவலை தடுக்க ஏற்கனவே கடந்த 10-ந்தேதி அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு 24-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இருந்தாலும் தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் பிரதீப் கவுர், குகநாதன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 19  பேர் பங்கேற்றுள்ளனர். தலைமைச்செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்கு பின்னர் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட உள்ளார்.  அதன்பிறகு, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிக்கப்படும என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு 7ந்தேதி வரை நீட்டிப்பு? அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் குழு, மருத்துவ நிபுணர்களுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை?