சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு 24தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் குழு, மருத்துவ நிபுணர்களுடன்  ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மற்றும் ஊரங்கை மேலும் 15 நாட்கள் நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. அரசின் நடவடிக்கைக்கு மக்கள் சரியான முறையில் ஒத்துழைப்பு வழங்காததால், தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 தினங்களாக நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் என்றஅளவில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நாட்டிலேயே தொற்று பரவலில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது.  தொற்று பரவல் இனி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றுமருத்துவத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலின்  தலைமையில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு அவசர அவசியம் கருதி கூடி ஆலோசிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதன்படி, அனைத்து கட்டி எம்எல்ஏக்கள் குழு கூட்டம் இன்று மதியம்  தலைமைச்செயலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, ஊரடங்கை நீட்டிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக மருத்துவ நிபுணர் குழுவினருடனும் இன்றுகாலை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

இதையடுத்து, ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்றே வெளியாகும் என்றும், குறிப்பாக மேலும் 15 நாட்கள், அதாவது ஜூன் மாதம் 7ந்தேதி வரை  நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.