மூன்று ரவுடிகளும் குளியலறையில் விழுந்தார்களா?: பேஸ்புக் பதிவை நீக்கிய ஐ.பி.எஸ். அதிகாரி

Must read

அரவிந்தன் ஐ.பி.எஸ்.

காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த மூன்று ரவுடிகள், ஒரே மாதிரி காயம்பட்ட நிலையில் அப்புகைப்படங்களை வெளியிட்டு, “மூவரும் குளியலறையில் தவறி விழுந்து காயம் ஏற்பட்டதாக தகவல்” என்று முகநூலில் பதிவிட்ட ஐ.பி.எஸ். அதிகாரி, அந்த பதிவை நீக்கியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் அன்பழகன். இவர் நேற்றிரவு காட்டுப்பாக்கத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கரவாகனத்தில் வந்த மூன்று பேரிடம் விசாரணை செய்தார். அப்போது அவர்கள் காவலரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பித்துவிட்டனர்.

தகவலறிந்து வந்த காவலர்கள், அன்பழகனை மருத்துவமனையில் சேர்த்தனர்.

பிறகு, காவலரைத் தாக்கிய பன்னீர்செல்வம், விஜயகுமார், ரஞ்சித் ஆகியோரை பிடித்து காவல்நிலையம் கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் தி.நகர் டி.சி.யான அரவிந்தன் ஐ.பி.எஸ்., குறிப்பிட்ட மூவரும் கட்டுக்களுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, “குளியலறையில் விழுந்து இவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்” என்று பதிவிட்டார்.

இந்த பதிவு வைரலானது.

சமூக ஆர்வலர்கள், “மூவருக்கும் கை மற்றும் கால்களில் பலத்த காயம் பட்டிருப்பதை  படத்தைப் பார்த்தவுடன்  தெரிந்துகொள்ள முடிகிறது. தவிர ஒருவர் தடுக்கி விழுந்தார் என்றால் நம்ப முடியும். மூவரும் வரிசையாக தடுக்கி விழுவார்களா” என்று கேள்வி எழுப்பினர்.

அரவிந்தன் பதிவு

சிலர் இப்படத்தை மனித உரிமை ஆணையத்துக்கும் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், டி.சி. அரவிந்தன், தான் பதிவிட்ட குறிப்பிட்ட பதிவை நீக்கியுள்ளார். உயரதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் அவர் நீக்கியதாக கூறப்படுகிறது.

இவரைப்பற்றி காவல்துறையில், “அரவிந்தன் நேர்மையான அதிகாரி. தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை வாங்கித்தருவதில் முனைப்பாக இருப்பார். யாருடைய சிபாரிசு வந்தாலும் அதற்காக பின்வாங்க மாட்டார். கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முக்கிய பிரமுகர் போட்டியிட்ட தொகுதியில் பணியாற்றிய இவர்,  30க்கும் மேற்பட்ட தேர்தல் வழக்குகளை பதிந்தார். தென்காசி பகுதியில் இவர் பணிபுரிந்தபோது குற்றங்கங் குறைந்தன. பிறகு சென்னை மவுண்ட் பகுதியில் டிராபிக் டிசியாக பணியாற்றியபோதும், தற்போது திநகர் பகுதியில் டிசியாக பணியாற்றி வரும்போதும் சிறு குற்றச்சாட்டுக்கும் ஆளாகமல் பணியாற்றும் நேர்மையாளர்” என்கிறார்கள், காவல்துறை வட்டாரத்தில்.

அதே நேரம், “குற்றச்சாட்டுக்கு ஆளான மூவர் ஒரே நேரத்தில் காயமடைந்திருப்பதும், அவர்கள் மூவரும் குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டார்கள் என்பதும், அதை முகநூலில் பதிவேற்றுவதும் சரிதானா” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article