பாஜக-வுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் சேராத கட்சிகளை நாடு மன்னிக்காது என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

உடல்நிலை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கட்சி விவாகரங்களில் இருந்து ஒதுங்கி இருந்த லாலு பிரசாத் யாதவ் டெல்லியில் இன்று நடந்த ஆர்ஜேடி தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

கட்சியின் செயற்குழு உறுப்பினர்களிடையே பேசிய அவர் பாஜக-வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மக்களுக்கு அளித்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று கூறிய அவர், நாட்டின் பணவீக்கம் அதிகரித்திருப்பது குறித்து பிரதமர் சிறிதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை என்று கூறினார்.

ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் பணம் வரவு வைக்கப்படும் என்று கூறிய பாரதிய ஜனதா கட்சி இப்போது அந்த பணத்தை எங்கே வைத்துள்ளது ? என்று கேள்வி எழுப்பினார்.

நரேந்திர மோடியை அகற்ற வேண்டும் என்பதை நாடு இப்போது புரிந்துகொண்டுள்ளது என்று கூறிய லாலு பிரசாத் யாதவ், எனவே அனைத்து கட்சிகளும் காங்கிரஸுடன் இணைந்து பாஜகவுக்கு எதிராக போராட வேண்டும், இதை செய்யாத கட்சியை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பேசினார்.

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலம் ரெய்டுகள் நடத்துவதால் நாங்கள் பயப்படவில்லை, ஆட்சியை இழந்தால் நமது நிலை என்ன ஆகுமோ என்று பாஜக-வினர் தான் பயத்தில் உள்ளதாக லாலு கூறினார்.

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் முன்னதாக உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.