மோடியைப் போல் ஒரு வசூல் ராஜாவை நாடு இதுவரை பார்த்ததில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஊழல் பல்கலைக்கழகம் ஒன்று இருந்தால் அதற்கு வேந்தராக இருக்க தகுதியானவர் மோடி என்று கூறிய ஸ்டாலின், பாஜக ஆட்சியில் நடைபெற்ற தேர்தல் பத்திர ஊழல், பி.எம். கேர் நிதி ஊழல், கொரோனா கால ஊழல், ரஃபேல் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை பட்டியலிட்டார்.

மேலும், “ஊழல் கறை படித்தவர்கள் பாஜக கட்சியில் சேர்ந்த உடன் அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் வாங்கியதோடு அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பளித்து ஊழல்வாதிகளை ஆதரவாக செயல்பட்டு வருகிறார் மோடி.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் சுருக்குப் பையில் இருந்த பணத்தைக் கூட விட்டுவைக்காத மோடி அரசு தொடர்ந்து நாட்டு மக்கள் அனைவரையும் வங்கி கணக்கு தொடங்க வைத்து மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் ரூ. 21000 கோடியை ஆட்டையை போட்டது.

தற்போது, வழிபாட்டு முறையில் பாகுபாடு புகுத்தி சைவம் அசைவம் என்ற பெயரில் மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று அவர்களின் உண்ணும் சோற்றில் மண்ணை அள்ளி போடாதீர்கள்” என்று பேசினார்.

தென் சென்னை மற்றும் மத்திய சென்னை திமுக வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பெசன்ட் நகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

சர்வாதிகார, எதேச்சதிகார, ஊழல் நிறைந்த மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.