இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம் ஆனால் நீங்கள் (இசையமைப்பாளர் ஆர். இளையராஜா) அப்படிச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆர். மகாதேவன் கூறினார்.

இளையராஜா இசையமைத்த பாடல்கள் மீதான உரிமைகள் தொடர்பாக எக்கோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட் தொடர்ந்த வழக்கு கடந்த ஏப்ரல் 10ம் தேதி நீதிபதி முகமது ஷபீக் முன் விசாரணைக்கு வந்தது.

1970கள் மற்றும் 1990 களுக்கு இடையில் 1,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இளையராஜா இசையமைத்த 4500க்கும் மேற்பட்ட பாடல்களின் உரிமை எக்கோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று அந்நிறுவன வழக்கறிஞர் கூறினார்.

இதற்கான உரிமையை அந்த படத்தயாரிப்பாளர்களிடம் வாங்கியுள்ளதாகவும் கூறினார். இந்தப் பாடல்களை Spotify என்ற இசை ஸ்ட்ரீமிங் தளத்தில் ஒலிபரப்ப இளையராஜாவுக்கு பணம் வழங்கப்படுகிறது.

அதற்கு இளையராஜாவுக்கு உரிமை இல்லை என்றும் இந்த வழக்கு முடியும் வரை இந்த தொகையை நீதிமன்றத்தில் செலுத்த Spotify நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், “இந்த பாடல்கள் அனைத்தும் இளையராஜாவுக்கு உரிமை உள்ளது” என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட எக்கோ ரெக்கார்டிங் நிறுவன வழக்கறிஞர் விஜய் நாராயணன், “இளையராஜா தன்னை எல்லோருக்கும் மேலானவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த பராசரன் “ஆம், எல்லோருக்கும் மேலானவர் தான். ஆணவமாகத் தோன்றலாம் ஆனால் அதுதான்… நிச்சயமாக கடவுளுக்கு மேல் இல்லை, ஆனால் அவருக்குக் கீழே, எல்லோருக்கும் மேலானவர்” என்று குறிப்பிட்டார்.

பராசரனின் இந்த பேச்சு பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், “இளையாராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை அப்படிச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆர். மகாதேவன் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணை வரும் ஏப்ரல் 24ம் தேதி மீண்டும் நடைபெற உள்ள நிலையில் மூத்த நீதிபதியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.