புது டெல்லி:
கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பாஜக அரசின் அலட்சியமே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் குறைத்துக் காட்டப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதைத் தனது ட்விட்டரில் பகிர்ந்த ராகுல் காந்தி, “மோடி ஜி உண்மையைப் பேசவில்லை. மற்றவர்களைப் பேச விடவும் இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று அவர் இன்னும் பொய் சொல்கிறார்!” ட்வீட் செய்துள்ளார்.

மேலும், அவர் தனது ட்விட்டரில், “நான் முன்பே கூறியிருந்தேன் – கொரோனா காலத்தில் அரசின் அலட்சியத்தால், ஐந்து லட்சம் அல்ல, 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். உங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள், மோடி ஜி கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹ 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கொரோனா உயிரிழப்புகளைக் கணக்கிடும் உலக சுகாதார அமைப்பின் முயற்சியை இந்தியா தடுப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.