சென்னை: மே 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில், வாக்குபெட்டிகள் வைத்துள்ள அறையானது, (ஸ்டிராங் ரூம்) வேட்பாளர்கள், பிரதிநிதிகள் மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில் வீடியோ பதிவு செய்து திறக்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்குப்பெட்டிகள் மாநிலத்தின் 6 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 4 அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. இந்த அறையானது, வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ந்தேதி அன்று திறந்து வாக்கு எண்ணப்பட உள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கான பொதுத் தேர்தல் கடந்த 23ம் தேதி 75,064 வாக்குச்சாவடிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளின்படி காப்பறைக்கு இரண்டடுக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு குறைந்தபட்சம் 1 படைப்பிரிவு அளவிலான ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படை 24X7 கண்காணிப்பு கேமரா முதலிய ஏற்பாடுகளுடன் வீடியோ பதிவு செய்யப்பட்டு, தொடர்புடைய காப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இருப்புக் காப்பிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளின்படி, இருப்புக் காப்பிற்கான காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. காப்பறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக தங்களின் பிரதிநிதிகளை அனுப்புமாறும், அவர்கள் பாதுகாப்பு வளையத்தின் உள் சுற்றுக்கு வெளியே தங்கி கண்காணிக்காலாம் என தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரியால் எழுத்து வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்காக காப்பறையின் கண்காணிப்பு கேமரா ஒளிபரப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நாளன்று, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மத்தியப் பார்வையாளர்கள் முன்னிலையில், வீடியோ பதிவு செய்யப்பட்டு காப்பறை திறக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஸ்ட்ராங் ரூம் ( Strong Room – காப்பறை )
காப்பறை என்பது, வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைத்துள்ள அறையாகும். வாக்குப்பதிவுக்குப் பிறகு, அந்த வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு வாக்கு இயந்திரங்களை பாதுகாக்கும் அறைக்கு பெயர்தான் ஸ்ட்ராங் ரூம் என அழைக்கப்படும் காப்பறை. இந்த இடத்தில்தான் வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படுகிறது. இந்த அறை வீடியோ பாதுகாப்புடன் பல அடுக்கு காவல்துறையினர் பாதுகாப்புடனும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
[youtube-feed feed=1]