டெல்லி:  ஜெயலலிதாக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தால் ஆராய முடியாது என்றும், ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் உச்சநீதி மன்றத்தில் அப்போலோ பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் உடல்நலககுறைவு காரணமாக சுமார் 75 நாட்கள் அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நலமாக இருப்தாக தினசரி தகவல்களை தெரிவித்து வந்த அப்போலோ நிர்வாகம், திடீரென  கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி மாலை ஜெயலலிதா சிகிச்சை பலன்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இதையடுத்து, விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அவருடைய குடும்ப மருத்துவர், அமைச்சர்கள், சிகிச்சை வழங்கிய அப்போலோ நிர்வாகம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் என 100க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் ஆனுப்பி விசாரித்து வருகிறது.

இந்த விசாரணையின்போது, அப்போலோ மருத்துவர்கள் ஆணையத்தில் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சி அளிக்கும்போது தாங்கள் கூறும் தரவுகள் தவறாகப் புரிந்துக் கொள்ளப்படுவதாகவும், எனவே மருத்துவக் குழுவை அமைத்து அவர்கள் முன்னிலையில் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை வருகிற 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அப்போலோ மருத்துவமனை தரப்பில், உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,   ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன்,  தனது வரம்பை மீறுவதாகவும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவ நிபுணர் குழு மட்டுமே ஆராய முடியும், ஆணையத்தால் ஆராய முடியாது  என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளது.