டில்லி,

போக்குவரத்தில் நிகழும் குற்றங்களை தடுக்கும் விதமாக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர பல்வேறு அம்சங்களை நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

மாநிலங்களவையில் இன்று போக்குவரத்து மற்றும் சுற்றுலா தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பித்தது.

அதில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி ஒருவர் உயிரிழந்தால் அதை மரண விளைவிக்கும் குற்றமாக கருதவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சாலைகளின் உள்கட்டமைப்புக்கு ஏற்றவகையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த தேவையான சட்டமியற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் சாலைகள் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையிலும் நெடுஞ்சாலைகள் மணிக்கு 120 மைல் வேகத்தில் செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பலர் மணிக்கு 240 கிலோ மீட்டர் வரை வேகமாக செல்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் சாலைப்பாதுகாப்பு கல்வி தொடர்பான பாடத்திட்டங்கள் கொண்டுவரவேண்டும், சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் வாகன உரிமையாளர்களுக்கு அதிக அளவில் தண்டம் விதிப்பது, ஓட்டுநர்களுக்கு பணிநேரம் ஒதுக்குவது, அதிகாலை நேரங்களில் கனரக வாகனங்கள் சாலைகளில் செல்வதை தவிர்ப்பது என்பவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரையில் கூறப்பட்டுள்ளன.