பாட்னா,

தேர்தலில் வெற்றிபெற கூலிப்படையை வைத்து சொந்த அண்ணனையே கொன்ற கொடூர நிகழ்வு உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் இந்தமாதம் 11 ம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் முதல்கட்ட தேர்தல் தொடங்குகிறது.

இந்நிலையில் மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள குர்ஜா தொகுதியில் போட்டியிடும் ராஷ்ட்ரிய லோக்தல் வேட்பாளர் மனோஜ்குமார் கெளதமை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அஜித்சிங்கின் மகனும், பொதுச்செயலரு மான ஜெயந்த் சவுத்ரி திங்கட் கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த பெரோஷ் சபிர், ப்ரவிந்தர் ஜாதவ் ஆகிய இருவரும் வினோத் மற்றும் சச்சின் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இவர்களில் வினோத், ஆர் எல் டி வேட்பாளர் கெளதமின் சகோதரர் ஆவார். சச்சின் என்பவர் கெளதமின் குடும்ப நண்பராவார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். கொலையுண்டவர்களின் தொலைபேசி அழைப்புகளை ஆராய்ந்த போலீஸாருக்கு, வினோத்தின் சகோதரர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து கெளதமின் தொலைபேசிக்கு வந்த அழைப்புகளின் குரல் பதிவுகளை ஆராய்ந்த போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. தனது சகோதரனை கொல்ல கூலிப்படையைச் சேர்ந்த பெரோஷ் சபிர், ப்ரவிந்தர் ஜாதவ் ஆகியோரை வேட்பாளர் கௌதம் நியமித்தது தெரியவந்தது.

கொலையாளிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் அவர் கொடுத்துள்ளார். தனது சகோதரனை பலிகொடுத்து அனுதாப ஓட்டுகளை பெற்று தேர்தலில் வெற்றிபெற விரும்பியதாக போலீசாரிடம் கெளதம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இச்சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது