தஞ்சாவூர்: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கு  தேர்தல் பொதுக்கூட்டங்கள்  மற்றும் மக்களின் மெத்தனமும்  காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தஞ்சையில் சில பள்ளிக்கூடங்களில் அடுத்தடுத்து மாணாக்கர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டு வருவதால், தஞ்சாவூர் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு  தஞ்சாவூர் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 460 மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் முன்னதாக 56 மாணவிகளுக்கும் ஒரு ஆசிரியருக்கும்  தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது மேலும் 2 தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அந்த பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகள் அனைவருக்கும்  கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 27 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. ற்போதைய நிலையில்,  தஞ்சை பகுதியில் 100க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர்கள், உறவினர்கள், கிராமத்தில் உள்ள மக்கள் என 1700 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 9 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியருக்கும் , மதுக்கூர் அருகே ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகப் பெண் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி தஞ்சை அருகே உள்ள  கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்நிலையில் தற்போது மேலும் இரண்டு தனியார் பள்ளிகளில் 27 மாணவிகளுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை இதுவரை 7 பள்ளிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தஞ்சாவூர் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறி இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.