‘தம்பி’ – திரை விமர்சனம்

Must read

கார்த்தி நடிப்பில் ‘தம்பி’ – திரை விமர்சனம்

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தை இயக்கிய மலையாள பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், சத்யராஜ், கார்த்தி, ஜோதிகா மூவரின் அளவான நடிப்பில் வந்திருக்கும் தரமான படம் ‘தம்பி’ .

 

கோவா வில் சிறு சிறு குற்றங்கள் செய்துகொண்டு, அங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏமாற்றி உல்லாச வாழ்க்கை வாழும் கார்த்தி.

மகனை தொலைத்த மேட்டுப்பாளையம் பகுதி எம்.எல்.ஏ. சத்யராஜ், அவன் நினைவாகவே வாழும் அக்கா ஜோதிகா.

இவர்களுடன் 15 ஆண்டுகள் கழித்து வந்து சேர்கிறார் கார்த்தி. வந்த இடத்தில் கார்த்தியை கொல்ல நடக்கும் முயற்சியும், யார் அவரை கொல்ல பார்க்கிறார்கள் என்பது தான் கதை.

நிகிலா விமல் கார்த்தியின் ஜோடியாக நடித்திருக்கிறார்.

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக செல்கிறது. முதல் பாதி கலகலப்பு என்றால் இரண்டாம் பாதி சஸ்பென்ஸ், திரில்லர் என்று விறுவிறுப்பாக செல்கிறது.

இடைவேளையில் தொற்றிக்கொள்ளும் விறுவிறுப்பு கிளைமாக்ஸ் வரை காப்பாற்றப்பட்டிருக்கிறது. கிளைமாக்ஸ் சற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் அமைந்திருக்கிறது.

படத்தின் சஸ்பென்ஸ் முடிச்சுகள் அனைத்தும் காட்சியில் தொய்வில்லாமல் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டாமல் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும் திரைக்கதை பிரமாதம்.

 

கார்த்தியின் பாட்டியாக வரும் சௌகார் ஜானகி முதல் சீதா, இளவரசு, அன்சன் பவுல், ஹரீஷ் பேராடி, பாலா, அம்மு அபிராமி, குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் வரை அனைவரின் பங்கும் சிறப்பாக தந்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுகள்.

கிளைமாக்ஸில் ஓரிரு முடிச்சுகளுக்கு விடையில்லை என்பதை, இறுதியில் அக்கா தம்பி செண்டிமெண்ட் உருக்கத்தில் கரைத்துவிடுகிறார்கள்.

மலை பாதையில் நடக்கும் சேசிங் காட்சிகள் சிறப்பாக உள்ளது. பாடல்கள் தவிர்த்து விட்டு பார்த்தால் ஒரு மாஸ் என்டர்டைனருக்கு உண்டான அனைத்து பார்முலாவும் உள்ள படம்.

மொத்தத்தில் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச காட்சிகள் இல்லாத, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சென்று பார்க்க கூடிய சிறந்த பொழுதுபோக்கு படம் ‘தம்பி’

More articles

Latest article