சென்னை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு,   அறுபடை முருகன் கோவில் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.   தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள்  காவடி எடுத்தும், அலகு குத்தியும், தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

தைமாதம் வரும் பௌர்ணமி மற்றும் பூச நட்சத்திரம் ஒன்று கூடும் நாளில் தைப்பூசம் திருவிழா கொண்டாப்படுகிறது. அதுவும் இந்தாண்டு முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை வருவது கூடுதல் சிறப்பு என கூறப்படுகிறது.  முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதியில் உள்ள முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. குறிப்பாக  திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருஆவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகள் மட்டுமின்றி,  மாநிலம் முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான முருகன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் கூடி வருகிறது.

சென்னை வடபழனி முருகன் கோயிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் கொண்டு வரும் பாலால், முருகனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அந்தவகையில், காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்காக சிறப்பு வரிசைகளும், வசதிகளும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வடபழனி முருகன் கோயிலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே குவியத் தொடங்குவார்கள் என்பதால் போலீஸார் அதற்கான முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். தைப்பூசத்தையொட்டி, இரவு 8.30 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது. காலை5 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகனின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூச திருவிழா இன்று நடைபெற்று வருகிறது.

தைப்பூசத்தை முன்னிட்டு அலகு குத்தி பாதயாத்திரையாக முருகனை தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். மூன்று ரத வீதிகளில் பக்தர்கள் வரிசையாக காத்திருந்து, சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டண தரிசனத்தில் வருபவர்கள் கோயிலுக்கு இடப்புறமாகவும், இலவச தரிசனத்தில் செல்பவர்கள் கோயிலுக்கு வலது புறமாகவும், கிரிவலப் பாதை நெடுக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருப்பதற் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் பாதுகாப்பிற்காக 150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தற்போது திருப்பரங்குன்றத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு மேல் 6.30-க்குள் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரமாகி, தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் சாலை வழியாக ஏராளமான பக்தர்கள் காவி மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூர் நகர் பகுதியில் பாதயாத்திரை பக்தர்கள் சிரமமின்றி செல்ல போக்குவரத்து போலீசார் நெரிசலை சரிசெய்யும் பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதயாத்திரை பக்தர்கள் நீண்ட நேரம் தரிசன வரிசையில் நிற்காமல், எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது நெல்லை சாலையிலும், தூத்துக்குடி சாலையிலும் நடந்து வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நகரின் எல்கை பகுதியில் வைத்து கையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள பாதயாத்திரை பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தவுடன் தனி பாதையில் சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு  திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா பிப்.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா தொடங்குவதற்கு முன்கூட்டியே பல்வேறு மாவட்டங்களில் இருந்து விரதம் இருந்து மாலை அணிந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கினர். தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று (பிப்.10) இரவு நடைபெற்றது. இன்று செவ்வாய்கிழமை (பிப்.11) தைப்பூசத்தை முன்னிட்டு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தைப்பூசத்தை முன்னிட்டு நள்ளிரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்தனர்.

லட்சக்ணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்ததால் கிரிவீதி, சந்நதி வீதிகள் உட்பட பழநி முழுவதும் காவி மற்றும் பச்சை உடை அணிந்து வந்த பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவடி எடுத்து கிரிவீதிகளில் ஆடி வந்தனர். பலர் அலகு குத்தி வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மலையில் இருந்து கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாக இறங்க அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பகுதி பகுதியாக பக்தர்களை மலைக்கு செல்ல போலீஸார் அனுமதித்தனர்.

திருவள்ளூர் திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. தைப்பூசத்தையொட்டி மூலவருக்கு பால், பன்னீர், விபூதிேன் கொண்டு அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு தங்கவேல் தங்க கிரீடம், மாணிக்க கல், வைர ஆபரணத்துடன் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கோயில் நிர்வாகம் இலவச தரிசனம் மற்றும் கட்டண வழி தரிசனம் போன்றவற்றில் முன்னேற்பாடுகள் செய்யாததால் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல்  பல மணி நேரம் காத்திருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவிலில் தைப்பூசம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் பிரபவ முதல் அட்சய முடிய 60 தமிழ் வருட தேவதைகளும் இங்கு திருப்படிகளாக அமையப்பெற்று குறிப்பிடத்தக்கதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது. நேற்று ரத ரோஹ ரோகணம் என்னும் சப்பர தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் சிகர நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூச விழா கோலாகலமாக நடந்தது.
முருகப்பெருமானை தரிசிக்க அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். நேரம் செல்லச் செல்ல கட்டுக்கடங்காமல் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்து அர்ச்சனை செய்து, மனமுருகி முருகப்பெருமானை வழிபட்டனர்.  ஏராளமான பக்தர்கள் காவடி, பால்காவடி சுமந்தும், பால்குடம் எடுத்தும் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அபிஷேகம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்டு பிரசாதம் பெற்று சென்றனர்.  முன்னதாக காலை வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதி உலா புறப்பட்டார். பின்னர் காவிரி ஆற்றில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று புனிதநீர் ஊற்றி தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
முன்னதாக காலை வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதி உலா புறப்பட்டார். பின்னர் காவிரி ஆற்றில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று புனிதநீர் ஊற்றி தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. விழாவை யொட்டி கும்பகோணம், தஞ்சாவூர், ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களும் கோவிலுக்கு இயக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி மலர்களால் அலங்கரித்த வள்ளி தெய்வானையுடன் தங்கமேனியில் காட்சியளிக்கும் முருக பெருமானை தரிசனம் செய்தனர். ஆலயம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளதால் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தேர் திருவிழா களைகட்டியது. இந்த நிலையில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை வள்ளி தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு ராஜ வீதிகள் வழியாக தேர் வடம் பிடித்து கொண்டு செல்லப்பட்டது.

தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரோகரா என பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து முருகனை வழிபட்டனர். அதேபோல், பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். தேர் திருவிழாவை முன்னிட்டு சென்னிமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.