தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் திருப்பூர். இம்மாநகரம் ஆயத்த ஆடை தொழிலில் தலைசிறந்து விளங்குகிறது. வெளிநாடுகளில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சீசனுக்கான ஆயத்த ஆடை வியாபரம் களை கட்டும். எனவே இம்மாதங்கள் திருப்பூர் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு மிகவும் பிசியான மாதங்கள் ஆகும். ஆனால் இந்த ஆண்டு ரூபாய் நோட்டு பிரச்சனையால் தொழில் முற்றிலும் முடங்கிப்போயுள்ளது.
காரணம் என்னவென்றால் இங்குள்ள தொழிலாளர்களில் அறுதிப் பெரும்பான்மையினர் தங்களது சம்பளத்தை பணமாக (cash) பெறுபவர்கள். ரூபாய் நோட்டு பற்றாக்குறையால் தொழிற்சாலை நிர்வாகத்தால் பணமாக சம்பளத்தை கொடுக்க இயலாத நிலையில் வேலைக்கு வர ஆட்கள் தயாராக இல்லை.
திருப்பூரில் 5 லட்சம் தொழிலாளர்கள் ஆடை தொழிற்சாலைகளில் பனிபுரிகிறார்கள். ஆண்டுதோறும் 40 ஆயிரம் கோடிக்கான தொழில் இங்கு நடக்கிறது. இதில் ஏற்றுமதியில் மட்டும் 25 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் திருப்பூர் நகரம் கடந்த 15 நாட்களாக களையிழந்து போயிருக்கிறது. இதன் தாக்கம் மேலும் சில மாதங்கள் நீடிக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது
இந்த தற்காலிக முடக்கத்தின் விளைவாக தங்களுக்கு பலகோடி மதிப்புள்ள வியாபாரம் தரும் நல்ல வெளிநாட்டு வாடிக்கையாளர்களை இழந்துவிடக்கூடும் என்று திருப்பூர் முதலாளிகள் அஞ்சுகின்றனர். கறுப்பு பணத்தை ஒழிப்பது நல்ல நோக்கம் என்பதில் எந்த முரண்பாடும் இல்லை. ஆனால் மோசமான திட்டமிடுதலின் விளைவாக பாதிக்கப்பட்டது தொழிற்சாலைகளும் தொழிலாளர்களும்தான் என்று அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் அவசர உதவி கொடி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.