மோடியின் “நோட்டு செல்லாது” நடவடிக்கையை ஆதரிக்கும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு, சி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன்,கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியன இணைந்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வி அடைந்தன. ஆனாலும் அதன் பிறகும் இக் கூட்டணி செயல்படுவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இக் கட்சிகளிடையே பல்வேறு முரண்பாடுகள் தொடர்கின்றன. சமீபத்தில் பாண்டிச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தன்னிச்சையாக அறிவித்தார். உடனே மக்கள் நலக்கூட்டணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வைகோ, “மக்கள் நலக் கூட்டணி என்பது தமிழகத்தில் மட்டும்தான். மற்றபடி எந்நாளும் காங்கிரஸ் கட்சியை மக்கள் நலக்கூட்டணி ஒப்புக்கொள்ளாது” என்று சமாளித்தார்.
ஆனால் சென்னையில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட திருமாவளவன், “காங்கிரஸ் தலைமையில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்” என்று பேசினார்.
ஆகவே ம.ந.கூட்டணி செயல்படுகிறா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் மோடி அறிவித்த “செல்லாது” அறிவிப்பை ம.ந.கூட்டணியில் உள்ள சி.பி.ஐ., சி.பி.எம்., விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியன கடுமையாக எதிர்த்து வருகின்றன.
ஆனால் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மோடியின் நடவடிக்கையை தீவிரமாக ஆதரித்து வருகிறார். “கறுப்பு பணத்தை ஒழிக்கும் சிறந்த நடவடிக்கை இது” என்று பேசி வருகிறார்.
இது குறித்து சி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் முத்தரசனிடம் செய்தியாளர்களர்கள் கேட்டபோது, ஆதங்கத்துடன் அவர் பதில் அளித்தார்:
“மோடியின் நோட்டு செல்லாது அறிவிப்பை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஏன் ஆதரிக்கிறார் என்று தெரியவில்லை.
கறுப்புபணம் ஒழிய வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. எல்லோருமே கறுப்பு பணம் ஒழிக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறோம்.
ஆனால் மோடியின் திட்டமிடப்படாத இந்த நடவடிக்கையினால் அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். பணத்தை மாற்ற முடியாமல் ஏழை தொழிலாளர்களும், மக்களும்தான் பாதிக்கப்படுகிறார்கள். இதுவரை 16 விவசாயிகள் மாண்டுவிட்டார்கள்.
பெருமுதலாளிகளுக்கு வழங்கப்பட்ட 7016 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. 11லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடன் வராக்கடன் என்ற பெயரில் பெருமுதலாளிகளுக்கு சாதமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மோடியின் நடவடிக்கையால் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் பாதிக்கப்படவில்லை என்பது வைகோவுக்கு தெரியும். ஆனாலும் ஏன் இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை” என்று முத்தரசன் தெரிவித்தார்.
.