டில்லி:

நேபாளம் எல்லை வழியாக சில பயங்கரவாதிகள் டில்லியில் ஊடுருவி உள்ளதாகவும்,  டில்லியில் சதி வேலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும்  உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை நடத்த, ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதி களிடம் பாகிஸ்தான் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக உளவுத்துறை தெரிவித்து உள்ளது.

தங்களுக்கு கிடைத்த  தகவலின்படி,  உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள, இந்தியா – நேபாளம் எல்லை வழியாக சில  பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாகவும், அவர்கள் தீபாவளி சமயத்தில்,, டெல்லி உள்பட முக்கிய நகரங்களில், நாச வேலையில் ஈடுபட  திட்டமிட்டிருப்பதாகவும் எச்சரித்து உள்ளது.

பயங்கரவாதிகளின் உரையாடல்களை இடைமறித்துக் கேட்டபோது, இந்த தகவல் தெரிய வந்திருப்பதாக கூறியுள்ள உளவுத்துறை அதிகாரிகள் கோரக்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.