டெல்லி: கடந்த அதிமுக ஆட்சியின்போது  குற்றம் சாட்டப்பட்ட டெண்டர் முறைகேடு விவகாரத்தில் எஸ் பி வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சி துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர்மீது ஏராளமான புகார்கள் உள்ளன.   2016-20 ஆம் ஆண்டு ரை அமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி சுமார் ரூ.58 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் டெண்டர் முறைகேடு தொடர்பாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்ததும், லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர்,  எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி, எஸ்.பி.வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், எஸ்பி வேலுமணிக்கு தொடர்புடைய நிறுவனங்களின் வங்கி கரூ.110 கோடியே 93 லட்சம் நிரந்தர வைப்பீட்டு தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கம் செய்துள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக  10 வாரத்தில் விசாரணையை முடித்து டெண்டர் முறைகேடு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, தனக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் முதற்கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு  செய்திருந்தார்.

வழக்கின் கடந்த விசாரணையின்போது, எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு வழக்கின் விவரங்களை எஸ்பி வேலுமணியிடம் வழங்குவோம் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பு வழங்கியது.  டெண்டர் முறைகேடு விவகாரத்தில் எஸ் பி வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளதுடன்,  வழக்கு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை வேலுமணி தரப்பிற்கு வழங்க தமிழகஅரசுக்கு உத்தரவிட்டது.

[youtube-feed feed=1]