நாமக்கல்: சேலம் அருகே நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 17ந்தேதி அன்று நடைபெற்ற தேர்வின்போது, தேர்வறையில்  கட்டுக்கட்டாக பிட் பேப்பர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5 கிலோ எடை அளவிலான அந்த பிட் பேப்பர்களை கவனிக்காத தேர்வு பணியில் இருந்து 11 கண்காணிப்பாளர்கள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வுகள் மே 5ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  நாமக்கல் மாவட்டத்தில் 200 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் +2 பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர். கடந்த 17ந்தேதி அன்று நடைபெற்ற தேர்வின்போது,  நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கொல்லிமலை, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் காப்பி அடித்து எழுத பிட் பேப்பர்கள் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வறையில் சுமார் 5 கிலோ பிட் பேப்பர்கள் கைப்பற்றப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணாக்கர்கள் தேர்வின் போது காப்பி அடிக்க பயன்படுத்தப்பட்ட பிட்டு பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பிட் பேப்பர்கள் அனைத்தும் ஜெராக்ஸ் காப்பிகள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது எந்த பள்ளியின் அருகில் நடந்தது யார் இதற்கு காரணம் என விசாரணை நடைபெற்று வருகிறது.  இதையடுத்து, பிட் பேப்பர் தொடர்பாக  11 அறை கண்காணிப்பாளர்களையும் தேர்வு பணியில் இருந்து கூண்டோடு நீக்கி  தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சமீபகாலமாக பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை அடிக்க பாய்வதும், ரகளையில் ஈடுபடுவதும், பெண்கள் குடித்து விட்டு நடப்பது போன்ற வீடியோக்கள் பரவி வரும் நிலையில் தற்போது தேர்வு நடைபெறும் சமயங்களில் பிட் பேப்பர் கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.