ஆசிரியர் ரஜினிகாந்த்

 

சிவகங்கை:

போதையில் தள்ளாடியபடியே பள்ளிக்கு ஆசிரியர் வந்த அதிர்ச்சி சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

சிவகஙஅகை மாவட்டம் திருபுவனம் அருகில் பூவந்தியில் உள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி. இங்கு விளையாட்டு ஆசிரியராக பணியாற்றுபவர் ரஜினிகாந்த்.

 

இவர் அடிக்கடி மது போதையில் பள்ளிக்கு வருவதாக புகார் இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் பள்ளியிலிருந்து கிளம்பிச் சென்ற ரஜினிகாந்த் முழு போதையில் திரும்பினார். நிற்கக்கூட முடியாமல் தள்ளாடியவரை மாணவர்கள் தாங்கிப் பிடித்து தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நிற்க முடியாமல் கீழே விழுந்தார் ஆசிரியர் ரஜினிகாந்த். அவரது சட்டைப்பையில் இருந்து செல்போன், பணம் கீழே விழுந்தும் அதை உணரும் நிலையில் ரஜினிகாந்த் இல்லை. ஏதேதோ உளறியபடி  அங்கேயே படுத்து உருண்டார். இக்காட்சியைக் கண்ட மாணவர்கள் அதிர்ந்தனர்.

இந்த நிலையில் உள்ளுர் பிரமுகரான மணிகண்டன் என்பவருக்கு தகவல் தெரியவர, பள்ளிக்கு வந்த அவர், ஆசிரியர் ரஜினிகாந்த் நிலைமையை செல்போனில் படமெடுத்து மாவட்ட ஆட்சியருக்கும் மாவட்டக் கல்வி அதிகாரிக்கும் அனுப்பினார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பள்ளிக்கு விரைந்து வந்தார் கல்வி அதிகாரி அகிலா. அவரிடம், உதவி தலைமை ஆசிரியர் நாகலெட்சுமி  புகார் அளித்ததன் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக ரஜினிகாந்த் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு, மாவட்டக் கல்வி அதிகாரி ஏஞ்சலோ இருதயராஜ் உத்தரவின் பேரில் ஆசிரியர் ரஜினிகாந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.