மராவதி

தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வார்கள் என அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தை இரண்டாக பிரித்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.   பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவை என தெலுங்கு தேசம் கட்சி தொடர்ந்து கேட்டு வருகிறது.    ஆனால் மத்திய அரசு அவ்வாறு அளிக்க மறுத்து விட்டது.   நிதி அமைச்சர் அருண் ஜெட்லி “சிறப்பு அந்தஸ்து வழங்கும் பேச்சுக்கே இடமில்லை.   அதற்கு பதிலாக கூடுதல் நிதி உதவி அளிக்கப்பட்டும்”  என தெரிவித்தார்.

இதை ஒட்டி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேர்று செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அவர், “ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு உதவும் எண்ணத்தில் இல்லை.  அதை அவர்கள் முடிவாக தெரிவித்து விட்டனர்.   அருண் ஜெட்லி கூறியது அதை உறுதிப்படுத்துகிறது.   நாங்கள் மக்களுக்கு பணி ஆற்ற மத்திய அமைச்சரவையில் சேர்ந்தோம்.     ஆனால் இப்போது எங்கள் சொந்த மாநில மக்களுக்கு தேவையானவைகளையும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.

இனியும் எங்கள் கட்சி அமைச்சரவையில் தொடர வேண்டாம் என முடிவு எடுத்துள்ளோம்.   இந்த தவிர்க்க முடியாத காரணத்தால் எங்கள் கட்சி அமைச்சர்கள் பதவி விலக உள்ளனர்.    அனேகமாக நாளை (அதாவது இன்று)  தங்கள் ராஜினாமா கடித்தத்தை அவர்கள் வழங்குவார்கள்.   இதற்குப் பிறகாவது மத்திய அரசு ஆந்திர மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளும் என நம்புகிறேன்.   பாஜக வுடன் உள்ள கூட்டணி தொடருமா என்பது குறித்தும் ஆலோசனையில் உள்ளோம்.   விரைவில் அது குறித்து அறிவிக்க உள்ளேன்”  எனக் கூறி உள்ளார்.

மத்திய அமைச்சரவவையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பாக விமானப் போக்குவரத்து அமைச்சராக அசோக் கஜபதி ராஜு மற்றும் அறிவியல் தொழில் தொடர்புத்துறை இணை அமைச்சராக ஒய் எஸ் சவுத்ரி ஆகியோர் உள்ளனர்.