டில்லி

ருவர் மனம் ஒத்து திருமணம் செய்துக் கொள்ளும் போது அதில் யாரும் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.

கடந்த 2010ஆம் வருடம் சக்தி வாகினி என்னும் சமூக ஆர்வலர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.   அதில் காதல் திருமணம் செய்துக் கொண்ட தம்பதியர் கொலை மிரட்டல் உட்பட பல அச்சுறுத்தல்களை நேர் கொள்ள வேண்டி உள்ளதாகவும் அவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.    இத வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

நேற்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர் மற்றும் சந்திர சூட்   ஆகியோரின் அமர்வின் கீழ் இந்த வழக்கு விசாரிணைக்கு வந்தது.   அப்போது இந்த அமர்வு, “இருவர் மனம் ஒத்துப் போய் தங்களின் ஜாதி, மதம் போன்றவற்றை மீறி திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்யும் போது அதில் யாருக்கும் தலையிட உரிமை இல்லை.   எந்த ஒரு மூன்றாவது மனிதரோ அல்லது அவர்களின் உறவினரோ இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ, வன்முறை மூலம் தலையிடவோ அல்லது அவர்களின் உயிருக்கு  மிரட்டல் விடுக்கவோ உரிமை இல்லை.” என தெரிவித்தது.

மேலும் இந்த அமர்வு அவ்வாறு திருமணம் செய்துக் கொண்டவர்கள் இது தொடர்பாக மாநில அரசின் உதவியை அணுகலாம் எனவும்,  மாநில அரசுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்களுக்கு உதவ சிறப்பு காவல் துறையை அமைக்கவேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது