தமிழகத்தில் டாஸ்மாக் நடத்தி வரும் அனைத்து மதுபான கூடங்களையும், 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு, டாஸ்மாக் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வழக்கம்போல மேலோட்டமான வாதங்கள், பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எல்லோருமே,பிரச்சினைகளுக்கான ஆணிவேர்களை மட்டும் மறந்து விடுகிறார்கள் என்பதுதான் காமெடியான விஷயம்.

இந்தியா முழுக்க மதுபான விற்பனை பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும், எப்போதும் மதுபான விற்பனை பற்றிய குமுறல்களுக்கு பஞ்சமே இல்லை.

காரணம், ஒவ்வொரு மட்டத்திலும் அரசாங்கத்தின் அடாவடித்தனங்கள்தான்.
உதாரணத்திற்கு, அண்டை மாநிலங்களில் நடைபெறும் மதுபான விற்பனையை எடுத்துக்கொள்வோம்.

அங்கே மதுபானக்கடைகளை நடத்திக்கொள்ள தனியாருக்கு அனுமதி அளிப்பார்கள். கூடவே மதுபான கூடங்களையும் நடத்திக்கொள்ள அனுமதிப்பார்கள்.

எல்லாவகையான மதுபானங்களும் குடிமகன்களுக்கு கிடைக்கும். குறிப்பிட்ட மது வகைகளைத்தான் விற்போம் என சில கம்பெனிகளை மட்டுமே பிடித்துக்கொண்டு, தொங்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

இன்னும் சொல்லப்போனால், ஒரு குடிமகன் மதுபானம் வாங்கினால் அதற்குரிய ரசீதை கடைகளில் தருவார்கள். விற்கப்படும் மதுபானம் தரமானதா என்பதை உறுதி செய்துகொள்ள அடிக்கடி சோதனை நடத்துவார்கள்.

வாடிக்கையாளர் மதுபான கூடத்திற்குச் என்றால், அவருக்கு தண்ணீரையும் டம்பளரையும் இலவசமாகத் தருவார்கள்.வாங்குகின்ற நொறுக்குத் தீனிக்குத்தான் தனியாக கட்டணம் வசூலிப்பார்கள்.

குடிமகன்களும் சக்திக்கு ஏற்றவாறு செலவழித்துவிட்டு சந்தடியில்லாமல் குடித்து விட்டு நடையை கட்டுவார்கள். கண்ட இடங்களில் எல்லாம் குடித்துவிட்டு பாட்டில்களை வீசி செல்கிற பழக்கத்தை பல மாநிலங்களில் காணமுடியாது.

ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே இதுபோன்ற அநாகரீகமான செயல்களை விதிவிலக்காக காண முடியும். அப்படியே தமிழ்நாட்டுக்கு வந்தீர்களானால், எல்லாமே தலைகீழாக இருக்கும்.

அது அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, கேவலம் என்பது ஒரே லெவல் தான்.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. 1967-ல்அறிஞர் அண்ணா முதலமைச்சராக பதவி ஏற்றபோது தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி. இலவச அரிசி போன்ற சமூகநலத் திட்டங்களை செயல்படுத்த முடியாத அளவிற்கு, நிதி நிலைமை.

அப்போது மதுவிலக்கை தளர்த்தினால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய்கள் கிடைக்கும் என்று அதிகாரிகள் யோசனை தெரிவித்தனர். ஆனால் அறிஞர் அண்ணாவோ,” மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெய் உருண்டை மாதிரி. அதை எடுத்து சாப்பிட முடியாது” என்று சொல்லி தவிர்த்து விட்டார்.

அண்ணா மறைந்து கலைஞர் முதலமைச்சரான பிறகு திமுக ஆட்சியில் 1971 ஆம் ஆண்டில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டு சாராயக்கடைகள் திறக்கப்பட்டன. தனது எல்லா படங்களிலும் மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்துவந்த எம்ஜிஆரும் அப்போது திமுகவில் பொருளாளராக இருந்தார்.

சாராய பழக்கத்தால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதைய டுத்தே 1974-ல் தமிழகத்தில் சாராயக் கடைகளை மூடினார் கலைஞர்.

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981 ஆம் ஆண்டு மீண்டும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு எம்ஜிஆர் ஆட்சியில் சாராயக்கடைகள் திறக்கப்பட்டன.

ஜெயலலிதா ஆட்சியில் இன்னும் ஒரு படி மேலே போய் டாஸ்மாக் என்ற ஒன்றை உருவாக்கி, அரசே மதுபானங்களை கடைகளில் விற்கும் அளவுக்கு கொண்டு போனார்.

அது இன்று ஆலமரம் போல் வளர்ந்து வருடத்திற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கஜானாவுக்கு அள்ளித் தரும் அட்சய பாத்திரமாக மாறி இருக்கிறது.

மறுபடியும் கேட்டுப் பார்ப்போம். எல்லா மாநிலங்களிலும் மதுபான விற்பனை நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் இவ்வளவு சர்ச்சைகள்?

முதலில் தமிழகத்தில் தரமான மதுபான வகைகள் விற்கப்படுகிறதா என்பதே சந்தேகம் என்கின்றனர் பலரும். கடைகளை அரசே நடத்தினாலும் மதுபான கடைகளில் சோதனை என்பது மருந்து அளவுக்கும் தமிழ்நாட்டில் கிடையாது.

அப்புறம் எல்லா விதமான மது பானங்களும் குடிமகன்களுக்கு விற்பனை என்பது கிடையாது.
குறிப்பிட்ட 5 அல்லது 6 கம்பெனிகளின் சரக்குகளை மட்டுமே டாஸ்மாக் கடைகளில் விற்பார்கள்.

பச்சையாக சொன்னால் அன்றைய தினம் டாஸ்மாக் கடைக்கு லாரியில் எந்த சரக்கு வருகிறதோ அந்த கம்பெனி சரக்கு மட்டுமே குடிமகனுக்கு விற்கப்படும். அவனுக்கு என விருப்பமே இருக்கக்கூடாது.

அந்த சரக்கு கம்பெனிகள் யார் என்று பார்த்தால், ஒன்று ஆளுங்கட்சியினருடையதாக இருக்கும். அல்லது அவர்களின் ஆசிர்வாதம் பெற்ற நிறுவனமாக இருக்கும். இரண்டு ரகத்திலும் இல்லாமல் வேறு யாராவது நடத்தினால், அவர்கள் சகல அரசியல் தரப்புக்கும் கப்பம் கட்டுகிற கம்பெனியாக இருக்கும்.

அதனால்தான் இந்த ஏகபோக விற்பனையை எதிர்த்து, எந்த அரசியல் கட்சியும் தமிழகத்தில் குரல் கொடுக்கவே மாட்டார்கள்.

நுணுக்கமாக உற்றுப் பார்த்தால் அப்படி குரல் கொடுப்பதாக காட்டிக் கொள்பவர்களின் ஒரே கோஷம், டாஸ்மாக் கடைகளை உடனடியாக இழுத்து மூடுங்கள் என்பதாக மட்டுமே இருக்கும்.

உலகமயமாக்கல் நிலையில், இப்போதைக்கு இல்லாத ஊருக்குப் போகாத வழியை காட்டும் போக்கு அது.

சரி, டாஸ்மாக் கடைகளில் மதுவையாவது ஒழுங்காக விற்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது.

வயது வரம்பு இல்லாமல் யார் சென்று கேட்டாலும் சரக்கை கொடுப்பார்கள்.
பள்ளிச் சிறுவர்கள்கூட டாஸ்மாக் வாசலில் பீருக்காக நிற்கும் காட்சிகளை சர்வ சாதாரணமாக காணலாம்.

மற்ற மாநிலங்களைப் போல் வாங்குகிற சரக்குக்காவது ரசீது தருவார்களா என்றால், அதுவும் கிடையாது.

அப்புறம் முக்கியமான விஷயம், நாட்டில் எங்குமே இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டின் டாஸ்மாக் கடைகளில் தான், ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு அரசு நிர்ணயித்த சில்லறை விலையை விட பத்து ரூபாய் அதிகமாக வைத்து விற்பார்கள்.

வெறும் 10 ரூபாய் தானே என்று, அற்பமாக நினைக்கலாம். குவார்ட்டர் பாட்டிலுக்கு பத்து ரூபாய், ஆப் பாட்டிலுக்கு 20 ரூபாய் ஃபுல் பாட்டிலுக்கு 50 ரூபாய், குளிர்ச்சியூட்டி தரப்படும் பீர் பாட்டில் என்றால், இருபது ரூபாய் கூடுதல்.

டாஸ்மாக் ஊழியர்கள் இப்படி குடிமகன்களிடமிருந்து கூடுதலாக சுரண்டும் தொகை, வருடத்திற்கு எவ்வளவு தெரியுமா? சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை போகும் என்கிறார்கள், புள்ளிவிவரம் வைத்துள்ளவர்கள்.

இந்த 3000 கோடி ரூபாயையும் டாஸ்மாக் ஊழியர்களே எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது.

டாஸ்மாக் அதிகாரிகள், மதுபான கடை பகுதிகாவல் நிலைய போலீஸ்காரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் இவர்களோடு போனஸாக, பகுதி ரவுடிகள்… அனைவருக்கும் அதிகாரத்திற்கு ஏற்ப, தகுதிக்கேற்ப பணம் பிரித்து அளிக்கப்படும். இந்த குற்றச்சாட்டில் உண்மை இருக்குமா இருக்காதா என்பதை படிப்பவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

மதுபானங்களை விற்கும் தமிழக அரசு, அவற்றை அருந்துவதற்கு மற்ற மாநிலங்களைப்போல் வாடிக்கையாளர்களுக்கு நாகரீகமான முறையில் வழியை ஏற்படுத்தி தருகிறதா என்றால் அதுவும் கிடையாது.

டாஸ்மாக் பார் என்று அநியாய தொகைக்கு ஏலம் விடுவார்கள். அதாவது ஒரு கடையில் விற்கப்படும் பாட்டில்கள், காலி பாட்டில்கள் ஆக கருதப்பட்டு அவற்றின் விலையையும் சேர்த்து ஏலத்தில் நிர்ணயிப்பார்கள்.

ஒரு கடையில் மது வாங்குபவனுக்கு சரக்கோடு சேர்த்து பாட்டிலும்தான் சொந்தம். அப்படிப்பட்ட நிலையில் வாங்கும் கடைக்கு பக்கத்தில் உள்ள பாரிலேயே அந்த காலி பாட்டில் எப்படி சேரும் என்றும் அதனை எப்படி ஏலத்தில் கணக்கு சேர்க்கலாம் என்றும் யாரும் கேட்டு விடக் கூடாது.

இப்படி வகைதொகை இல்லாமல் விடப்படும் பார்களை, அநியாய விலையை எல்லாம் பொருட்படுத்தாமல் அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு பொருந்திய ரவுடிகள் ஏலம் எடுப்பார்கள்.

அப்புறம் என்ன? பார்களில் ஒவ்வொன்றிற்கும் இவர்கள் வைத்ததுதான் விலை. நொறுக்குத்தீனிககளை எல்லாம் விட்டுவிடுங்கள் ..
அடிப்படைத் தேவையான இரண்டு பொருட்களின் விலையை மட்டும் பார்ப்போம்.

50 காசு கிளாசுக்கு பத்துரூபாய் என்பார்கள். பத்து ரூபாய் வாட்டர் பாட்டில் 30 ரூபாய்.

மற்ற மாநில பார்களில் இலவசமாக தரப்படும் தண்ணீருக்கும் கிளாசுக்கும் தமிழகத்தில் குறைந்தபட்சம் ஐம்பது ரூபாயை ஒரு குடிமகன் செலவழிக்க வேண்டும். இந்த லட்சணத்தில் கொள்ளையடித்தால், விளிம்புநிலை குடிமகன்கள் யார்தான் பாருக்குள் தலைவைத்து படுப்பார்கள்.

இங்கே இன்னொரு முக்கியமான விஷயம் பார்களில் தென்படும் சுகாதாரம். சாக்கடைக்கும் டாஸ்மாக் பாருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் தெரியாது.

இதனால்தான் பெட்டிக் கடையில் மலிவு விலையில் இரண்டையும் வாங்கிக் கொண்டு, அருகில் ஏதாவது ஒரு இடத்தில் குடித்து விட்டு கண்ட இடத்தில் பாட்டிலை வீசி விட்டுச் செல்கிறார்கள் பாமரர்கள்.

இப்படிப்பட்ட லட்சணத்தில் இயங்கும் டாஸ்மாக் பார்களைத்தான்,ஆறு மாதத்திற்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை விற்கும் உரிமை உண்டே தவிர, மதுபான கூடங்களை நடத்தும் உரிமை கிடையாது என்று உயர்நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

மதுபானக் கூடங்களை நடத்த அனுமதி அளிக்கும் அதிகாரம், கலால் வரித் துறை ஆணையருக்கு மட்டுமே உண்டு என நீதிமன்றம் சொல்லியிருக்கிறது

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு டாஸ்மாக் பார்களை குறிவைத்து ஆளுங்கட்சியினர் சிண்டிகேட் அமைத்து ஆவலோடு காத்திருந்த நிலையில்தான் இந்த இடி விழுந்திருக்கிறது.

என்ன செய்யப்போகிறது அரசாங்கம் என்று இப்போதைக்கு தெரியவில்லை. தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போகிறார்களா அல்லது மதுபானக்கூட விவகாரத்தில் வேறு மாதிரியான முடிவை எடுக்கப் போகிறார்களா என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் மதுபான விவகாரத்தில் இனியாவது செய்யப்பட வேண்டிய விஷயங்கள் இவை தான்.

ஒன்று, மதுபான விற்பனையை நேர்மையாகவும் சீராகவும் நடத்த வேண்டும். விற்பனையில் அரசு விதிகளை மீறும் ஊழியர்களை கட்டாயம் பணிநீக்கம் செய்தே ஆக வேண்டும்.

அதேபோல மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது பொதுப்போக்குவரத்துகளில் பயணிப்பது போன்ற விஷயங்களை முடிவுக்கு கொண்டுவர, சட்ட திட்டங்களை கடுமையாக்க வேண்டும்.

ஒரு மது பாட்டிலை வாங்கி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அருந்துவதற்குள் தாவு தீர்ந்து விடும் என்கிற நிலை வரும்போது, முதலில் பொழுதுபோக்குக்காக, சும்மா ஜாலிக்காக மது அருந்துகிறோம் என்று சொல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடித்தே ஆக வேண்டும் என்றால மதுபான கூடம் அருகிலேயே போலீஸ் பீட் போடலாம். அப்படிப் போடப்பட்டால் என்ன நடக்கும் என்று நினைத்துப் பாருங்கள். நீங்கள் நினைப்பது மாதிரி எல்லாம் நடக்காது.

“போலீசார் மது அருந்துபவர்களை தொடர்ந்து பிடிப்பதால் சரக்கு வருமானம் குறைகிறது. விற்பனை ஏன் குறைகிறது என்று கேட்டு அரசாங்கம் எங்கள் கழுத்தை நெறிக்கிறது ” என்று டாஸ்மாக் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் எகிறி எகிறி குதிப்பார்கள். இப்படி குதித்த சம்பவங்கள் தமிழ்நாட்டில் ஏற்கனவே நிறைய உண்டு.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதுபான விற்பனைக்கு ஒரு ராசி உண்டு. நேற்று வரை மதுவிற்பனை முறைகேடுகளை கேள்வி கேட்டவர்கள், ஆட்சிக்கு வந்ததும் அதை விட அதிகமாக முறைகேடுகளை செய்யத் தொடங்குவார்கள்.

நேற்றுவரை முறைகேடு செய்து ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியானவர்கள், இப்போது முறைகேடும் முறைகேடு என துள்ளி குதிப்பார்கள்.

இவர்கள் இருவர்தான் இப்படி நாடகமாடுகிறார்கள் என்றால், மற்ற முக்கிய அரசியல் கட்சிகள் யாராவது வாயைத் திறப்பார்களா என்றால் அதுவும் கிடையாது.

குடிகாரர்களுக்கு எதற்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்று இந்த யோக்கிய சிகாமணிகள் சொல்வார்களே தவிர, குடிகாரர்களை பயன்படுத்திக் அடிக்கப்படும் கொள்ளை பற்றி இவர்கள் வாயை திறக்க மாட்டார்கள்.

ஒரே ஒரு வரிதான்.. Bloody everybody

– ஏழுமலை வெங்கடேசன்