சென்னை: நீட் விலக்கு மசோதா குறித்த சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி வரும் 8ந்தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜக, புரட்சி பாரதம் போன்ற  புறக்கணித்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பாமகவும் கலந்துகொண்டன.

இந்த கூட்டத்தில் ஆளுநர் விதிபட செயல்படவில்லை என்று குற்றம் சாட்டிய முதல்வர் ஸ்டாலின் பின்னர் அனைத்துக்கட்சிகளின் கருத்தை கேட்டறிந்தார். அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற டெல்லி சென்று போராட வேண்டும் என  வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றும் வகையில், சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீட் மசோதா குறித்து,  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2010ஆம் ஆண்டு நீட் மசோதா கொண்டுவரப்பட்ட போது காங்கிரஸிற்கு திமுக அளித்த ஆதரவை வாபஸ் பெற்றிருந்தால் இந்த மசோதாவே வந்திருக்காது. திமுக தும்பை விட்டு வாலை பிடிக்கிறது. திமுகவின் செயலால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். திமுக அரசின் மெத்தனப் போக்கே மசோதா தமிழ்நாட்டை தாண்டாததற்கு காரணம்” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.