சென்னை: பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அருவறுப்பான வார்த்தையால் அவதூறாக டிவிட்டரில் பதிவிட்ட நடிகர் சித்தார்த், சென்னை காவல்துறையினரிடம் மன்னிப்பு கோரி உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பிரபல பெண் ஊடகவியலாளர் ஆகியோர் குறித்து ஆபாசமான வகையில் டிவிட் போட்டிருந்தார் நடிகர் சித்தார். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியதுடன், தேசிய மகளிர் ஆணையமும் கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், சில இடங்களில் உள்ள காவல்நிலையங்களில்  புகார்கள் பதியப்பட்டன.

இதையடுத்து தனது கருத்துக்கு சித்தார்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக டிவிட் பதிவிட்டிருந்தார்.  அதை சாய்னாவும் ஏற்றுக்கொள்வதா அறிவித்தார்.

இதுதொடர்பாக  நடிகர் சித்தார்த்துக்கு சென்னை காவல் துறையினர்  கடந்த ஜனவரி 10ஆம் தேதி  சம்மன் அனுப்பியிருந்தனர். இதற்கு காணொளி காட்சி மூலம் ஆஜரான சித்தார்த், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்ததற்கும், பெண் ஊடகவியலாளரை அவதூறாக பேசிய விவகாரத்திலும் மன்னிப்பு கேட்டதாகவும், இது குறித்து தன்னுடைய வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக சென்னை மாநகர காவல் துறையினர் தெரிவித்தனர்.

இரண்டு புகார்கள் தொடர்பாகவும் நடிகர் சித்தார்த்தின் வாக்குமூலத்தை தேசிய மகளிர் ஆணையத்திற்கு சென்னை மாநகர காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.