மானாமதுரை: நெல்லையைத் தொடர்ந்து மானாமதுரை அருகே பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த  பெற்றோர்கள் பதற்றத்துடன் பள்ளிகளுக்கு வந்து தங்களது குழந்தைகளை அழைத்துச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில்,  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சங்கமங்கலம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுவர் முகப்பு இடிந்து விழுந்து 2 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த பள்ளியில்  15க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மட்டுமே பயின்று வரும் நிலையில், இன்று காலை பள்ளியின் முகப்பில் இருந்த மேற்கூரையின் சிலாப் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில், அங்கு படித்து வந்த  சங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்களான நித்தீஷ் மற்றும் சுபஸ்ரீ ஆகிய இரு மாணவர்கள் சிக்கினர். அவர்களின்  தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. இதில் நித்திஷ் என்ற மாணவருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டதாகவும். சுபஸ்ரீயின் கை மற்றும் கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காயமடைந்த மாணவர்களை பள்ளியின் ஆசிரியர்கள், சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவனுக்கு தலையில் தையல் போடப்பட்டது. இதையடுத்து இரு மாணாக்கர்களையும், அவர்களது  பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் பதற்றத்துடன் பள்ளிக்கு ஓடி வந்து, தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அரசு பள்ளியில் மேலும்  சில கட்டடங்களும் இடியும் நிலையில் இருப்பதாகவும், உடனே அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.