தஞ்சாவூர்:

ச்சநீதி மன்ற உத்தரவுபடி, மத்திய அரசு  காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க தமிழக அரசு வலியுறுத்திக் கோரி தஞ்சை மாவட்ட விவசாயிகள்,  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படுத்து போராட்டம் நடத்தினார். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில்  நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் வந்திருந்த நிலையில்,  கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலரின் மேடைக்கு முன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

உச்சநீதி மன்றம் விதித்த 6 வார  கெடுவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை  போலீசார் கூட்ட அரங்கிலிருந்து வெளியேற்றினர். அரங்கின் வெளியில் நின்றபடியே அவர்கள், தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.