சிறப்புக்கட்டுரை: கல்வியாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

3. என்ன செய்யலாம்

‘எல்ல்ல்லாம் சரிதான். பொத்தாம் பொதுவா, ’தப்பு சரியில்லை’ன்னு சொன்னா போச்சா…? இந்த.. இந்த இடத்துல இப்படி… இப்படி.. இருக்கு. இப்பொ அதுக்கு என்ன செய்யலாம்…?  என்ன மாற்றம் வேண்டி இருக்கு…? சொல்லலாம் இல்ல…?’

ஆமாம். அதுதான் சரி. அதைத்தான் பார்க்க இருக்கிறோம்.

’இது ஒரு வரைவு (draft) மட்டுமே. இதன் மீது, ஆலோசனைகள் தெரிவிக்கலாம். பரிசீலிக்கப் பட்டு, தகுந்த மாற்றங்கள் கொண்டு வரப் படும்’ என்று அரசு தெளிவாக அறிவித்து இருக்கிறது.

நம்முடைய மனக் குறை எல்லாம்…. பரவலாக மக்கள் மத்தியில் இது வைக்கப் பட்டு, பெரிய அளவில் மக்களின் பங்களிப்புடன் செயல் படுத்த, வழி காணலாமே.. என்பதுதான்.

இதற்கான எந்த முயற்சியும் யாராலும் மேற்கொள்ளப் படாத போது, சரியோ தவறோ, ஓரிருவரின் கருத்துகளோடு இந்தத் திட்டம் நிறைவேறி விடும்; பல நல்ல ஆலோசனைகள், கவனத்துக்கு வராமலே, நிறைவேறாமலே போய் விடலாம்.

சரி. தனிப்பட்ட பகுதிகளாகப் பார்த்து விடுவோம்.

முகப்புரை (Preamble)யில் இருந்தே தொடங்குவோம். “கற்க கசடறக் கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்னும் திருக்குறளை மேற்கோள் காட்டித் தொடங்குகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. (திருக்குறள், அதில் இல்லை. அதன் பொருள் மட்டுமே கூறப் படுகிறது. திருக்குறள் ஆங்கிலத்தில் இடம் பெற்றால்தான் என்ன…?)

”நிற்க அதற்குத் தக” என்கிறதே குறள்…. ‘அதற்கு’ என்கிற சொல்   எதைக் குறிக்கிறது…? அதற்கு முகப்புரையில் பதில் இல்லை.       அதில் இருந்து தாவி விடுகிறது.

அடுத்த வரியிலேயே, ஆமாம்; உண்மையிலேயே முகப்புரையின் மூன்றாவது வரியிலேயே, கல்வி குறித்து, அமர்த்யா சென் என்ன சொல்கிறார் என்று, இலக்கில் இருந்து ஓடி விடுகிறது. என்னதான் சொல்கிறார் அவர்…?

”வேலை கிடைப்பதை சாத்தியம் ஆக்குகிறது கல்வி” என்று ஒரு மிக அரிய கண்டுபிடிப்பை வெளிப் படுத்துகிறார் அவர். அதாவது,        ’கல்வியின் பண்பும் பயனும் வேலைக்குத் தயார் ஆவதுதான்’ என்கிற சித்தாந்தத்தை, அப்படியே ஆமோதிக்கிறது முகப்புரை.

வேலை, சம்பளம், உலக சந்தை, ’உலகக் குடிமகன்’… அதாவது, ஒவ்வொரு சிறுவன், சிறுமியையும் வேலைக்குத் தயார் செய்வதே கல்வியின் பிரதான நோக்கம்! இதைத்தான் ‘திறன் வளர்த்தல்’, ’படைப்பூக்கம்’ என்று வெவ்வேறு பெயர் வைத்து அழைக்கிறோம். எப்படி இருக்கிறது..? ஏற்றுக் கொள்ள முடிகிறதா…?

முகப்புரையின் தொடக்கமே மாற்றப் பட வேண்டும்.

’நிற்க அதற்குத் தக’ என்று திருக்குறள் எதைச் சுட்டிக் காட்டுகிறதோ, அதை தொடக்கக் கல்வியில் சிறுவர்களுக்கு முழுவதுமாக நிறைவாக வழங்குகிற விதத்தில் பாடத் திட்டம் அமையும் என்று முகப்புரை உறுதி செய்ய வேண்டும்.

அன்புடைமை, அருளுடைமை, ஒழுக்கமுடைமை, அறிவுடைமை, பண்புடைமை, பெரியோரைத் துணைக் கோடல் என்பன வெல்லாம், தொடக்கக் கல்வியில், குறைவற கற்றுத் தரப்படும் என்று முகப்புரை வெளிப்படையாக அழுத்தம் திருத்தமாக சொல்லட்டும். இது மிக அவசியம்.

முகப்புரைதான் ஆவணத்தின் உயிர் நாடி. முகப்புரையில் தரப்படுகிற உறுதி மொழியின் அடிப்படையில்தான், திட்டத்தைக் கேள்விக்கு உட்படுத்தவே முடியும்.

தொடர்ந்து, விழுமியம் சார்ந்த கல்வி என்பதற்கு முற்றிலும் மாறான கருத்துகளையே உரக்கப் பேசுகிறது முகப்புரை.

’இன்றைய சவால்களை’ எதிர்கொள்வதற்கு ஏதுவாக பாடத் திட்டத்தை ’முன்னேற்றுவதற்கான’ முயற்சிகள் குறித்து பெருமை அடித்துக் கொள்கிறது முகப்புரையின் இரண்டாவது பத்தி. (’பாரா’)

அதிர்ச்சிகரமான போக்கு இது. மன்னிக்கவும். கற்றறிந்த குழுவினர், பொறுப்பான பெற்றோராக இருந்து கல்வி முறையை வடிவமைத்ததாகத் தெரியவில்லை.

பொருளாதாரக் கண்ணோட்டம் மட்டுமே விஞ்சி நிற்கிறது. ’நான், எனது’ என்கிற தன்னையே மையமாகக் கொண்ட ‘self centred’ கல்வி அமைப்பைத் தமிழ்நாட்டின் மீது திணிக்கிறது புதிய பாடத்திட்டம்.  கவனம் – இது, மிகப் பெரிய ஆபத்து; கொடுமை.

உடனடியாக முகப்புரை திருத்தி எழுதப்பட வேண்டும்.

’அன்பு, ஒழுக்கம், பணிவுடைமை, பிறர் நலன் பேணுதல் உள்ளிட்ட குண நலன்களை வலியுறுத்துகிற தொடக்கக் கல்வி வலுவாகக் கற்றுத் தரப்படும்’ என்று முகப்புரை, தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

’நல்ல மனிதனாக, நெறிமுறைகளில் நம்பிக்கை கொண்ட நல்ல குடிமகனாக ஒவ்வொரு சிறுவன், சிறுமியும் வார்த்தெடுக்கப் படுவார்கள்; இதுவே தொடக்கக் கல்வியின் பிரதானமாக நோக்கம்’ என்று கூறினால் மட்டுமே புதிய பாடத் திட்டம் ஏற்புடையதாக இருக்க முடியும்.

‘இது சற்றும் அடிப்படையற்ற வாதம்; பாடங்களைப் பார்க்காமல் தனக்குத் தோன்றியதை எல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். விழுமியங்களுக்கு முக்கியத்துவம் தருகிற பாடங்கள்தான் திட்டத்தில் இடம் பெற்று இருக்கின்றன’ என்று சொல்லலாம். பிறகு ஏன், முகப்புரையில் அது குறித்த குறிப்பு இல்லை…? அதற்கு மாறான விவரங்கள் எப்படி முகப்புரையில் இடம் பெற்றன…?

திறுக்குறள், ஆத்தி சூடி, மூதுரை, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, பக்தி இலக்கியம், பாரதியார், தேசிய வினாயகம் பிள்ளை பாடல்கள் ஆகியன (இப்படி இன்னும் பல) எந்த அளவுக்கு அதிக அளவில் சிறுவர்களுக்கு கற்றுத் தரப் படுகின்றனவோ, அவ்வளவுக்கும் நல்ல நெறிமுறைகளை வளர்க்கும்.

பள்ளிக்கு வரும் பிள்ளைகள், பொருட்கள் அல்லர். பொறுப்பான குடிமக்கள்; நல்ல தலைவர்கள். அவர்களை நல்வழியில் செலுத்துவது நமது தலையாய கடமை. இன்று தமிழ்நாடு கண்டு வரும் பல சீரழிவுகளுக்கும், விழுமியக் கல்வியில் நாம் ’சாதித்த’ பின்னடைவே காரணம்.

புதிய பாடத் திட்டம் இதனைக் கணக்கில் கொண்டதாகவே தெரியவில்லை. அதனினும், விழுமியக் கல்விக்கு எதிர்த் திசையில் பயணிப்பதாகவே தோன்றுகிறது. பாடத் திட்டத்தை வடிவமைத்தவர்கள், விளக்குவதற்கு நிறைய இருக்கிறது. பார்ப்போம்.

முகப்புரையில் ஏற்கனவே சொல்லப் பட்டு இருக்கும் எந்த வாசகத்தையும் திருத்தவோ நீக்கவோ கோரவில்லை.

ஒவ்வொரு சிறுவன், சிறுமியும், நல்ல பண்புகள், குணநலன்கள் கொண்டவராக வளர்கிற விதத்தில் தொடக்கக் கல்வி அமையும் என்கிற உறுதிமொழியை முகப்புரையில் சேர்க்க வேண்டும் என்பதே முதல் விண்ணப்பம்.

முகப்புரையைத் தொடர்ந்து…., மொழிப் பாடங்கள்!!!!

( வளரும்)