சென்னை,

மிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு குறித்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்தார். அதன் காரணமாக மார்ச் மாதம் அவர்களுக்கு புதிய சம்பளம் வழங்கப்படும்.

கடந்த மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தின்போது, தமிழக சட்டமன்ற  உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான திருத்த சட்டமுன்வடிவு பேரவையில்  தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே  கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டசபையில், முதல்வர் பழனிசாமி, எம்.எல்.ஏ.,க்களின் மாதச் சம்பளம், 55 ஆயிரம் ரூபாயில் இருந்து, 1.05 லட்சம் ரூபாயாக, இம்மாதம் முதல் உயர்த்தப்படும் எனவும் தொகுதி மேம்பாட்டு நிதியும், 2.5 கோடி ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் அறிவித்தார். எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் தற்போதைய சம்பளத்தில் இருந்து 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டு இரு மடங்காக உயர்கிறது. அதன்படி தற்போது 55 ஆயிரம் சம்பளம் வாங்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், இனிமேல் 1 லட்சத்துக்கு 5 ஆயிரம் சம்பளம் வாங்குவார்கள்.

இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. அவர் நேற்று கையெழுத்திட்டதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய சம்பளம் வழங்கப்படுவது உறுதியானது.

இதன் காரணமாக அடுத்த மாதம் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் ரூ.1.05 லட்சம் புதிய சம்பளம் வாங்குவார்கள்.  மார்ச் 1ம் தேதி முதல் நிலுவைத் தொகை மற்றும் ஊதிய உயர்வுடன் எம்எல்ஏக்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.