டெல்லி : ஆளுநருக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழ்நாடு அரசு இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு அவகாசம் கேட்டிருந்த நிலையில் அதை ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம் இன்று மாலைகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்க்வி, ராகேஷ் திவேதி ஆகியோரின் வாதங்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. மேலும் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்த்கி, வில்சன் மற்றும் ஆளுநர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி ஆகியோர் இன்று மாலைக்குள் வாதங்களை தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதை தடுக்க உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது காரசார விவாதங்கள் நடைபெற்றது. கடந்த விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான பிரபல வழக்கறிஞர்கள்,,” ஆளுநருக்கு என்று மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதற்கு தனி தனி விருப்ப உரிமை கிடையாது. அவர் மாநில அரசின் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். மேலும் நிராகரிக்கப்படும் மசோதா 2வது முறை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதனை அவர் ஒப்புதல் செய்து ஆக வேண்டும். ஆனால் ஆளுநர் அந்த மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். அது ஏன் என்று தெரிய வேண்டும் என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்தனா். அதாவது தமிழக அரசு அனுப்பிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார் என்றால் அதற்கான காரணம் என்ன?. ஆளுநர் அப்படி ஏன் செய்ய வேண்டும். அது என்னவென்று ஆளுநர் தரப்பில் கூறப்படவில்லை என்றால் தமிழக அரசுக்கு எப்படி அதுபற்றி தெரியவரும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். மேலும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? ஆளுநருக்கா அல்லது மாநில அரசுக்கா என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதுகுறித்து மத்தியஅரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.
தொடர் விசாரணைக்கு பிறகு, இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு, மத்தியஅரசு மற்றும் ஆளுநர் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய அவகாசம் கோரிய நிலையில், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.