சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியுடன் சந்திப்பு நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு நடப்பதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமழக முதல்வராக பதவி ஏற்றபிறகு  முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் நடைபெற உள்ள முதல் சந்திப்பு  இதுவாகும். இந்த சந்திப்பின்போது,  முதல்வர் ஸ்டாலின், தமிழக திட்டங்கள், கொரோனா தடுப்பூசி, நீட் தேர்வு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பார் என தெரிகிறது.

டெல்லி வரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க பிரதமர் அலுவலகத்தில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினருடன்  புல்லட்புரூப் கார் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் பயண விவரம்:

3நாட்கள் டெல்லியில் முகாமிடும் முதல்வர் ஸ்டாலின் நாளை (16ந்தேதி) மாலை சென்னையில் இருந்து தனிவிமானத்தில் டெல்லி செல்கிறார். டெல்லியில்  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு அங்கு தங்குகிறார்.

நாளை மறுநாள் (17-ந் தேதி) முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில்  ங்கேற்பதுடன்,  தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு பிரதரை சந்திக்க ஸ்டாலினுக்கு அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி,  டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் பல்வேறு  முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அலுவலக ரீதியிலான இந்த சந்திப்பு சுமார் 1மணி நேரம் வரை நீடிக்கும் என்றும்,. இந்த சந்திப்பின்போது பிரதமர் அலுவலக அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்பட முக்கிய அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா பணியாற்றி வருகிறார். இவர் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது உடன் இருப்பார் என கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனியாக சந்தித்து பேசுகிறார்கள். இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் வரை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதையடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஹர்ஷவர்தன், பியூஸ்கோயல் மற்றும் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனை  உள்பட பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்திக்க நேரம் கேட்கப்பட்டு உள்ளது. அவர்களை சந்திக்கும்போது தமிழக திட்டங்கள் குறித்து ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

18ந்தேதி அன்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரையும் சந்திக்க உள்ளார். மேலும் டெல்லியில் உள்ள முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள் பலரை சந்திக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அரசுமுறை சந்திப்புகளுக்கு பிறகு  மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். அதன்படி காங்கிரஸ்தலைவர் சோனியாகாந்தி, ராகுல் உள்பட பலரை சந்திக்க இருப்பதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

மு.க.ஸ்டாலினின் டெல்லி சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைப்பதற்காக தி.மு.க. மூத்த தலைவரான டி.ஆர்.பாலு எம்.பி. ஏற்கனவே டெல்லி சென்றுள்ளார். இன்று மூத்த அமைச்சரான துரைமுருகன் டெல்லி செல்கிறார். மேலும்,  தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயனும் இன்று டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.‘

3 நாட்கள் டெல்லியில் பல்வேறு தலைவர்களை சந்திக்கும் ஸ்டாலின்,  18-ந் தேதி மாலை அல்லது 19-ந் தேதி காலை மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.