வாழப்பாடி:
வாழப்பாடியைச் சேர்ந்த பெண் இன்ஜினியர், பிரான்ஸ் நாட்டு வாலிபரை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், நேற்று திருமணம் செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி, காசி படையாச்சி தோட்டத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி.  அவரது மனைவி சுகந்தி. இவர்களது மூத்த மகள் கிருத்திகா.  இன்ஜினியரான கிருத்திகா, சிங்கப்பூரில் பன்னாட்டு நிறுவனத்தில், வணிக மேம்பாட்டுத் துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், உடன் பணிபுரியும் இன்ஜினியர் பிரான்ஸ் நாட்டின், பாரீஸ் நகரைச் சேர்ந்த, அசானே ஒச்சோயிட்  என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இது குறித்து, கிருத்திகா தன் பெற்றோரிடம் கூறி, திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தார். அசானே ஒச்சோயிட் குடும்பத்தினரும், திருமணம் தமிழக பாரம்பரிய முறைப்படி நடத்த சம்மதம் தெரிவித்தனர்.பிரான்ஸ் நாட்டிலிருந்து மணமகனின் உறவினர்கள், ஒரு வாரத்துக்கு முன்பே வாழப்பாடி வந்தனர். பெண் அழைப்பு நிகழ்ச்சியில், தமிழர் பாரம்பரிய முறைப்படி பங்கேற்றனர். நேற்று, சேலம், ஐந்துரோடு பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. அங்கு, தமிழர் கலாசாரத்துடன், அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அக்னி சாட்சியாக திருமணம் நடத்தப்பட்டது.திருமணத்துக்கு வந்த பிரான்ஸ் நாட்டினர், தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி,- சட்டை, சேலை, தங்க ஆபரணங்கள், தோடு, ஜிமிக்கி, கம்மல், அணிந்து திருமணத்தில் பங்கேற்றனர்.