டெல்லி: கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு பாராட்டுத் தெரிவித்து உள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் இதுவரை 46,15,18,479 பேருக்F தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில் 18வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. கர்ப்பிணிகளுக்கு கொரோனா தாக்கினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை எடுத்துச்சொல்லி, தடுப்பூசி குறித்த அச்சம் மற்றும் தவறான எண்ணங்களை நீக்க சுகாதார பணியாளர்களும், மருத்துவ அதிகாரிகளும் பெரும் முயற்சி எடுத்தனர். இதையடுத்து, கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், நாடு முழுவதும் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜூன் 3ந்தேதி கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதுவரை 78 ஆயிரத்து 838 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே அதிகம். இதை மத்திய சுகாதாரத்துறை பாராட்டி உள்ளது. அதையடுத்து, ஆந்திராவில் 34 ஆயிரத்து 228 பேருக்கும், ஒடிசாவில் 29 ஆயிரத்து 821 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாம்! உதயநிதி தொடங்கி வைத்தார்…