பெண்ணாடம்: தமிழ்நாட்டில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாம் பெண்ணாடத்தில் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் 2வது அலையானது தீவிரமாகப் பரவிய நிலையில், தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக, தொற்று பரவல் குறைந்து வருகிறது. மேலும், தமிழக சுகாதாரத்துறை சார்பில், தொற்று பரவலை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதே வேளையில், வயதானவர்கள்,‘ மாற்றுதிறனாளிகளுக்கு எனவும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து தற்போது கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாம் பெண்ணாடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை சென்னை  எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,38,583 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

மேலும் இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “18 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.