டெல்லி: தமிழகத்தில்  69% இடஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ளது. இதை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. இது தொடர்பான  தமிழக அரசின் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டு இந்திய அரசியல் சாசனம் 31பி, 31 சி பிரிவுகளின் கீழ் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு இது அமல்படுத்தப்பட்டு  நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால், 69சதவிகித  இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வப்போது வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் சார்பாக அவரின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக  வழக்கு தொடுத்துள்ளார்.

இதேபோல் உச்சநீதிமன்றத்தில் சிவி காயத்ரி என்ற மாணவி சார்பாக அவரது தந்தை எஸ். வைத்தீஸ்வரன் 69% இடஒதுக்கீடு முறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  விசாரணையின்போது, மாணவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகஅரசின்  69% இடஒதுக்கீடு முறையால் பொதுப் பட்டியல் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, இதுகுறித்து இரு வாரங்களுக்குள்  தமிழகஅரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.