சென்னை

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மறைந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.  எம், ஜி. ஆர் சமாதி அருகே அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஜெயலலிதாவுக்கு ஒரு நினைவிடம் அமைக்கத் தமிழக அரசு நிதி ஒதுக்கியது.

இதற்கான பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  இந்த நினைவிடம் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவிடம் சுமார் 50,422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.  நினைவிடம் 15 மீட்டர் உயரம் மற்றும் 30.5 மீ நீளம், மற்றும் 43 மீ அகலம் கொண்ட ஒரு மிகப் பெரிய பீனிக்ஸ் பறவையின் உருவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுத்திறன் பூங்காவின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.  எனவே இந்த பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை பொதுமக்கள் பார்வையிடத் தடை செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

file pic

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆகி கொரோனா காரணமாகத் தனிமையில் உள்ள ஜெயலலிதாவின் தோழி சசிகலா சென்னை திரும்பியதும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.  இந்நிலையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளைக் காரணம் காட்டி நினைவிடத்தை மூடி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.