சென்னை: கோவை ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸ் அனுப்பிய நோட்டீசை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு  தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு  ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்  கடந்த ஆண்டு (2021) நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.  அதில்,  சுற்றுசூழல் அனுமதியின்றி விதிமீறி காட்டியதால் ஏன் வழக்கு தொடரக்கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த  நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கின் விசாரணையின்போது,  கோவை ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம்  ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்வதாக உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம். யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும், எனவே விலக்கு பெற உரிமை உள்ளது என்றும் மொத்தமுள்ள 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 1.25 லட்சம் சதுர மீட்டரில் கல்வி நிலையம் உள்ளதால் விலக்கு பெற உரிமை உள்ளது எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளது.