ராய்பூரில் நடைபெற்று வரும் ரஞ்சிக்கோப்பை டெஸ்ட் போட்டியில் தமிழகம் அணி பரோடா அணியை ஒரு இன்னிங்ஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

mukund1முதலில் டாஸ் வென்ற தமிழக அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் தமிழக அணியின் அசத்தலான பந்துவீச்சில் பரோடா அணி வீரர்கள் அடுத்தடுத்து நடையை கட்டினர். முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்த பரோட அணி, அடுத்த 22 ரன்கள் சேர்பதற்குள் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியாக 34.3 ஓவர்களிலேயே 93 ரன் எடுத்து ஆல் அவுட் ஆகினர். தமிழக பந்துவீச்சாளர் விக்னேஷ் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் கிறிஸ்ட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். பின்னர் களம் இறங்கிய தமிழக அணி 337 ரன்கள் குவித்தது. அபினவ் முகுந்த் அதிகபட்சமாக 100 ரன்கள் அடித்தார்.

2-வது இன்னிங்ஸ்-யை துவங்கிய தொடங்கிய பரோடா அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 16 ஓவர்களுக்கு 44 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் தேவ்தார் 33, மிஸ்திரி 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்கள். ஆனால் இன்றைய ஆட்டத்தில் மீண்டும் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் பரோடா அணியினர். 67.5 ஓவர்களில் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் தோல்வியடைந்தனர். ஆஷிக் 4 விக்கெட்டுகளையும் விக்னேஷ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தமிழக அணி ஒரு இன்னிங்ஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தி 7 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் பிடித்தது.