சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சபை கூடியதும், கேள்வி நேரத்தின்போது, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு துறையைச் சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

தமிழக சட்டசபையில்  கடந்த 18-ஆம் தேதி 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம்   21, 22 மற்றும் 23-ஆம் தேதியும் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்கிறது.

சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை மீதான 2வது நாள் விவாதம் நடைபெறுகிறது.  இன்றைய தினம்  சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியே, கனரக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து அதிமுக எம்எல்ஏ. செங்கோட்டையன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறார்.

இன்றைய சபையின் கேள்வி நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதூர் புதிய வருவாய் வட்டமாக மாற்ற அரசு முன்வருமா? என அதிமுக  எம்எல்ஏ மார்க்கண்டேயன் எழுப்பிய கேள்விக்கு, புதூர், புதிய வருவாய் வட்டமாக மாற்றப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பதில் கூறினார்.  இது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தும், முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆனைமலை வருவாய் கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

சேந்தமங்கலம் அரசு சார்பில் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுமா என அந்த தொகுதி சட்டமன்ற  உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, சேந்தமங்கலம் தொகுதியின் சூழலை ஆய்வு செய்து தேவை இருந்தால் வீடு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். பல வீடுகள் பல ஆண்டுகளாக காலியாக இருக்கும் சூழலும் காணப்படுகிறது எனவும் கூறினார்.

புதிதாக தமிழ்நாட்டில் சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படுமா என்ற உறுப்பினர் கேள்விக்கு, இப்போதைக்கு புதிதாக சட்டக்கல்லூரி துவங்க முடியாது என சட்டப்பேரவை யில் அமைச்சர் ரகுபதி தகவல் தெரிவித்துள்ளார்.  புதிய சட்டக் கல்லூரியை வாடகைக்கட்டடத்தில் துவங்க ரூ.2.75 கோடி பணம், நிலம் உள்ளிட்டவை தேவைப்படுவதால் மாநிலத்தில் புதிய சட்டக்கல்லூரி தொடங்கும் முடிவு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நிதிநிலை சீரான பிறகு மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.