டெல்லி: கேரள மாநிலம் சார்பில் தொடர்ந்துள்ள முல்லைப்பெரியாறு அணை  தொடர்பான வழக்கில்,  தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.  புதிய வழக்குகளில் தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அனுப்ப முடியாது என்றும், தமிழ்நாடு அரசின் கருத்தை தெரிவிக்க அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு, தமிழகஅரசுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்து வருகிறது. அணையை உடைத்து விட்டு புதியஅணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. ஆனால், அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ததில் அணை பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்றத்தின் 2014-ம் ஆண்டு உத்தரவின் படி அமைக்கப்பட்ட மேற்பார்வை குழுவானது, அவ்வப்போது அணையை பார்வையிட்டு அணையின் உறுதி தன்மை குறித்து அறிக்கை அளித்து வருகிறது/

இந்த நிலையில்,  முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேரளாவில் இருந்து பல்வேறு தனிநபர்கள் உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் ஏற்கனவே பல முறை விசாரிக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புதிதாக மேலும் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில்,
கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்ய வருகிறது என்றும், அதற்கு மிழ்நாடு அரசு சார்பில் அணை பாதுகாப்பாக உள்ளது என விரிவான பதில் அளிக்கப்பட்டுள்ளன என்று கூறிய நீதிபதிகள், . இது போன்ற மனுக்கள் வேண்டும் என்றே வழக்கை திசை திருப்பும் நோக்கில் போடப்படுவதாக குற்றம் சாட்டினர். இதுபோன்ற  புதிய வழக்குகளில் தமிழ்நாடு அரசுக்கு எந்த நோட்டீஸும் அனுப்ப முடியாது என்று நீதிபதி கன்வில்கர் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இதனை தொடந்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் புதிய மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.