சென்னை: தமிழகம் ஆக்ஸிஜன் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளதாக தமிழ்நாடு  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ரெனால்ட் நிசான் சி.எஸ்.ஆர். நிதி  பங்களிப்பில் சென்னை அண்ணாநகர்  அரசு மருத்துவ மனையில் 2 எண்ணிக்கையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலன் அமைக்கப்பட்டு உள்ளது. இதை திறந்து வைத்த   அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.  “தமிழகத்தில் இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் கொரோனா பேரிடரில் முன்வந்து உதவிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் சார்பில் ரூ.5 கோடி மதிப்பிலான உதவிகளை செய்ய உள்ளனர். ஏற்கனவே ரூ.1 கோடி ரூபாயை தமிழக முதலவரிடம் கரோனா பேரிடர் நிதியாக வழங்கியிருக்கின்றனர். மீதமுள்ள ரூ.4 கோடி ரூபாயில் அண்ணாநகர், கலைஞர் நகர், தண்டையார் பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலன் தயாரிக்கும் பணிகளுக்கு செலவிட இருக்கின்றனர்.

இன்று அண்ணாநகர் புறநகர் அரசு மருத்துவமனையில் 1 கி.லோ லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலன் பணிகள் முடிவுற்று 2 எண்ணிக்கையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 100 படுக்கைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்க முடியும். மற்ற மாவட்டங்களில் அந்தப் பணிகள் முடிவுற்றப் பிறகு அவைகள் திறந்து வைக்கப்படும்.

இந்த ஆட்சி பொறுப்பேற்றதற்கு முன்பு ஆக்ஸிஜன் உற்பத்தி என்பது 270 கிலோ லிட்டர் என்கிற அளவில் இருந்தது. மே-7க்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு Liquid Oxygen Generator Plant என்கிற வகையில் 744.67 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பி.எம். கேர்ஸ் நிதி பங்களிப்பில் 70 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பின்கீழ் 77 பி.எஸ்.ஏ., ஆலைகள் அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவுறுத்தலையேற்று தனியார் மருத்துவமனைகளில் 61 பி.எஸ்.ஏ., ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரயில்வே வாரிய மருத்துவமனைகளில் 4 பி.எஸ்.ஏ., ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. என்.எல்.சி. மருத்துவமனைகளில் 10 ஆக்ஸிஜன் ஆலைகள் நிறுவப்பட்டு, ஆக்ஸிஜன் வச தி என்பது மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் 11,651 என்ற அளவிலும் பி-டைப் 12,457, டி-டைப் 9,450 என்பது கையிருப்பில் உள்ளது. ஆக்ஸிஜன் வசதியை பொறுத்த அளவில் தமிழகம் தன்னிறைவு பெற்று விளங்குகிறது. மே-6க்கு முன்பு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்பது எந்த அளவிற்கு இருந்தது என்பதை அனைவருமே நன்றாக அறிவார்கள். மிகப்பெரிய அளவில் பேரிடர் காலத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்தது. ஆனால் எதிர்காலத்தில் இந்த நிலை ஏற்படாத வண்ணம் தமிழக முதல்வர் ஸ்டாலினின் சிறப்பான நடவடிக்கைகளினால் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிஜன் ஜெனரேட்டர், ஆக்ஸிஜன் சிலிண்டர்ஸ் மற்றும் ஆக்ஸிஜன் ஆலைகள் தன்னிறைவு பெற்று இருந்து கொண்டிருக்கிறது என்றார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். “தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (01-12-2021) ரெனால்ட் நிசான் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பில் அண்ணாநகர் புறநகர் அரசு மருத்துவமனையில் 2 எண்ணிக்கையில் (1 கிலோ லிட்டர்) ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலனை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தி மலர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.