தமிழகத்தின் ஒரிரு இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Must read

சென்னை: தமிழகத்தின் ஒரிரு இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதமாக மழை கொட்டி வந்தது. இதனால் தலைநகர் சென்னை உள்பட பல பகுதிகளில் வெள்ளத்தில் மிதந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை  மெல்ல குறையத்தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இன்று (டிச.1) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வங்கக்கடலில் தற்பொது அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிக்கு நகரக்கூடும்.

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுப்பெற்று வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கரையை வரும் 4-ம் தேதி காலை நெருங்க கூடும் என தெரிவித்து உள்ளது.

நாளை (டிசம்பர் 2) மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (டிசம்பர் 3) தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்றுதெரிவித்து உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்த படியாக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வங்கக்கடலில் தற்பொது அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிக்கு நகரக்கூடும்.

இதன் காரணமாக இன்று அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை (டிச.2) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மறுதினம் (டிச.3) மத்திய வங்கக்கடல் பகுதியில் புயல் காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

More articles

Latest article