சினிமா தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிருப்தி…

Must read

சென்னை: தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில், தமிழகஅரசு சினிமா தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வருவாய்த்துறை பிறப்பித்த உத்தரவுக்கு  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  8,21,550 ஆக உயர்நதுள்ளது. இதுவரை   12,166 பேர் உயியிழந்துள்ளனர். அதே வேளையில் குணமடைந்தோர் எண்ணிக்கை  8,01,414 ஆக உயர்நதுள்ளது. தற்போது 7,970 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையில் லண்டனில் இருந்து பரவி வரும் உருமாறிய கொரோனா பாதிப்பும் தமிழகத்தில் 5 ஆக உயர்நதுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசு, தியேட்டர்களில் கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து  100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு திரையுலகைச் சேர்ந்த ஒருசிலர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகஅரசு அமைத்துள்ள கொரோனா மருத்துவ நிபுணர்குழு தலைவரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  100% தங்க அனுமதிக்க அரசு எடுத்த முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்து உள்ளார்.  வருவாய் துறையால் வழங்கப்பட்ட  அரசாணையை பார்த்ததாக கூறியவர், இது தொடர்பாக,  அவர்களுடன்  விவாதிப்போம் என்றதுடன், மத்தியஅரசு வழங்கியுள்ள கொரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிப்பது தொடர்பாக, அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தவர்கள் ;2,144 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 24 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.  இதையடுத்து அவர்களுடன்  தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கு என மொத்தமாக 44 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 5 மடங்கு டெங்கு பாதிப்பு குறைவு என்றும் கூறினார்.

செய்தியாளர்கள் பறவைக் காய்ச்சல் குறித்துகேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,  கேரளத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் வரலாம். எனவே, கேரளத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான தேனி, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில்  உள்ள  26 செக் போஸ்ட்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,  தமிழக கால்நடைத்துறை- சுகாதாரத்துறை இணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article