லியோ படத்திற்கு 19ம் தேதி முதல் 24 ம் தேதி வரை 6 நாட்கள் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

துணிவு, வாரிசு ஆகிய படங்களுக்குப் பிறகு ரிலீசான எந்த ஒரு படத்திற்கும் இந்த சிறப்பு அனுமதி வழங்கப்படாத நிலையில் தற்போது லியோ படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதை அடுத்து சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரிய நிலையில் காலை காட்சி, மேட்னி ஷோ, ஈவினிங் ஷோ மற்றும் நைட் ஷோ தவிர கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு காலை 9 மணி முதல் பின்னிரவு 1:30 வரை திரையரங்குகள் இயங்க அனுமதித்துள்ளது.

சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து பொது சுகாதாரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை திரையரங்க உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிகாலை வேளைகளில் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்குவதால் காவல்துறையினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலையில் ரசிகர்களும் வரம்புமீறிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.

இதனால் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலித்து வந்த தமிழக அரசு தற்போது கூடுதலாக ஒரு காட்சிக்கு மட்டும் அனுமதி அளித்திருப்பதன் மூலம் வழக்கமாக திரைப்படங்களுக்குச் செல்பவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.